கோரிக்கைகளை ஏற்றதால் கோட்டாபயவுக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 30அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக  கூறினோம். அதன்படி தாமரை மொட்டு வேட்பாளர் கோட்டாபய எமது கோரிக்கைகளை  ஏற்றுக்கொண்டதால் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியகட்சி ஆட்சியின்  போது தான்  தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான  இராணுவத்தினர்  கொலைசெய்யப்பட்டபோதும் தென்பகுதியில் எந்தவொரு வன்முறையும் இடம்பெறவில்லை.

 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் போது வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது தென்பகுதியில் எந்தவொரு வன்செயல்களோ, தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களோ இடம்பெறவில்லை. அத்துடன் அவர்களின் உடைமைகளும் சேதமாக்கப்படவில்லை.

எமக்கு மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இ.தொ.கா அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தது. அதனால் எவ்விதமான முன்நிபந்தனையுமின்றி தேர்தலில் ஆதரவு வழங்கினோம் தற்போது நடுநிலையிலுள்ளோம். அதனால்  எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபயவுக்கு எமது ஆதரவினை வழங்கிவருகின்றோம்.  மேலும் இதுவரைகாலமும் அரசியல்வாதிகள் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். இம்முறை சிறந்த நிர்வாகியான கோட்டாபய ராஜபக்ஷ  களமிறங்கியுள்ளார். அவரது நிர்வாக திறமை வேறுபட்டதாக இருக்கும். அவர் ஜனாதிபதியானால் அடுத்த பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ.  இருவரும் இணைந்து அரசில் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஆட்சி நடாத்துவார்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையிலான  அணி அமோக வெற்றிப்பெறும்.

கடந்த காலத்தில்  தோட்ட தொழிலாளர்களின் பேச்சுவாத்தையின் போது ஒருநாள் சம்பள நிர்ணயத்தொகையாக  1000 ரூபா அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்தினர் 140 ரூபா ஒரு நாள் சம்பளத்திற்கு மேலதிகமாக பெற்றுத் தருவதாக கூறினர். அதன் பின்னர் இத்தொகை 100 ரூபா, 50 ரூபாவானது. அதன் பின்னர் அரசாங்கம் தருவதாக  கூறிய அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. பின்னர் அமைச்சர் நவீன் திசாநாயக்க அப்பணத்தை தேயிலைசபையினால் வழங்கமுடியாது என்றார். ஆனால் இன்று தீபாவளிமுற்பணமாக 15 ஆயிரம் ரூபா தேயிலை சபையினால் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தேர்தல் காலம் என்பதனால் தோட்ட மக்களின் வாக்குகளை குறிவைத்து 15 ஆயிரம் ரூபாமுற்பணம் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி தினகரன் நிருபர்.

 

Sat, 10/19/2019 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை