அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வுபற்றி எதுவுமில்லை

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம்

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை பொருளாதாரத்துக்கு இரண்டாமிடம்

19ஆவது திருத்தச் சட்டம் உட்பட நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு நாட்டு மக்களிடையே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதால், சர்வதேச சக்திகளும் சர்வதேச அமைப்புகளுக்கு தேவைக்கேற்ற விதத்தில் அல்லாது எமது நாட்டு மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் புதிய அரசியலமைப்பொன்று சகல மக்களுடனும், மக்கள் இயக்கங்களுடனும் கலந்துரையாடப்பட்டு அறிமுகப்படுத்தப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப் பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட எவ்வித வாக்குறுதிகளும் இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் வெளியிடப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நிறைவேற்றுத்துறை, தேர்தல் முறைமைகள், மாகாண சபை முறைமை மற்றும் சட்டவாட்சிமுறை என்பவை அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும்.

அரசியலமைப்பானது ஒற்றையாட்சித் தன்மையுடையது என்பதுடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கும். அதேபோன்று ஏனைய மதங்களுக்கும் சம அந்தஸ்தளிக்கும்.

இனங்கள், மதங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் சர்வமத சபையொன்று உருவாக்கப்படும். மாகாண மாவட்ட மட்டத்தில் இந்த சபை இயங்குவதற்கான பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்படும்.

யுத்தத்தின் போது சரணடைந்த 13,784 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டது போன்று இராணுவத்தில் சில குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் விடுவிக்கப்படவில்லை. யுத்தத்தின்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலுள்ள இராணுவத்தினர் மற்றும் எல்.ரி.ரி. ஈ உறுப்பினர்கள் படிப்படியாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.

அத்துடன், தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் மூன்று மாதக்காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் அல்லது உரியவர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தேர்தல் விஞ்ஞானபத்தில் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார அபிவிருத்திக்கு இரண்டாமிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் தொழில்வாய்ப்புக்காக 10 வாக்குறுதிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு தொடர்பில் இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நாம் ஒருபோதும் எமது சகோதர மக்களான தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்திருக்கவில்லை. மூன்று தசாப்தகாலமாக தீவிரவாதத்தால் சந்தித்த அழிவுகளிலிருந்து மக்களை மீட்டெப்பதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது. இறந்த காலத்திற்கு அது சொந்தமாக இருந்தாலும், எமது பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வை குறைவாக மதிப்பிடவில்லை. மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற குறைபாடுகளை சரிசெய்துக்கொள்வதற்கான பொறிமுறையொன்று அவசியமென்பதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சம் பீதியற்ற நாட்டில் வாழும் சூழலே அவசியமாகும்.

2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் வடக்கு மக்களின் வாக்குகளை வறுமையை ஒழிப்பதாக பெற்றுக்கொண்ட போதிலும் 2014ஆம் ஆண்டு இருந்த நிலையையும் விட அந்த மக்கள் வறுமைக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இவர்களது பொருளாதார நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

1. வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்யவும் ‘புனர்வாழ்வு நிதியம்’ ஒன்றும் உருவாக்கப்படும்;.

2. யுத்தத்திற்கு முகங்கொடுத்த வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்திசெய்வதறக்காக சலுகை கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்பதுடன், நுண் கடன்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கின் பெண்களுக்கு அரச மத்தியஸ்தத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள சலுகை கடன்களும் அறிமுகப்படுத்தப்படும்.

3.புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்கள் தமது வாழ்வை வெற்றிக்கொள்ளவும் சுயதொழிலை மேம்படுத்தவும், வியாபாரங்களை ஆரம்பிக்கவும் மூலதனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளும் அதிகரிக்கப்படும்.

4.இங்குள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் ஆரம்பித்திருந்த பொருளாதார வலையங்கள் அல்லது வேறு முறைமைகளில் பாரிய மற்றும் சிறய அளவில் முதலீடுகள் கைத்தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும்.

5.இளைஞர், யுவதிகளுக்கு தேவையான தொழில்பயிற்சி பெற்றுக்கொடுக்கப்படும். தொலுக்குச் செல்லும்வரை கடன்களைப் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

6. தனியார் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படும். பாரிய மற்றும் நடுத்தர விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரச காணிகள் வரி அடிப்படையில் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்படும்.

7. வடக்கு, கிழக்கில் நிலவும் அரச பணி பற்றாக்குறைக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் போது அப்பிரதேசத்தவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும் என்பதுடன், பொலிஸ் சேவைக்கு ஆட்கள் இணைத்துக்கொள்ளப்படும் போது தமிழ் மொழி தகைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

8. இந்த இரண்டு மாகாண விவசாயிகளும் ஏனைய மாகாணங்களில் விவசாய பற்றாக்குறையை பூர்த்தி செய்துகொள்ள சிறிய, நடுத்தர வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படும்.

9. இரண்டு மாகாண இளைஞர்களதும் பிரச்சினைகள் தீர்வை வழங்கும் அதேவேளை, அவர்களது கல்வி மற்றும் திறன் வளர்ச்சியும் மேம்படுத்தப்படும்.

10. சர்வதேச தரம்வாய்ந்த விளையாட்டு மைதானமொன்று இரண்டு மாகாணங்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன், கலை, கலாசாரத்தை வளர்க்க மற்றும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள நவீன வசதிகளுடன் கூடிய ‘தாமரை தடாக அரங்கு’ ஒன்று அமைக்கப்படும்.

உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்படும் என்றும் மாடி வீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்ைக எடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படின் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கவும் நடவடிக்ைக எடுக்கப்படும். அந்தச் சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் உறவினர்களுக்கு மாதாந்தக் கொடுப்பன வொன்று வழங்கப்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2500 ரூபாய் சம்பள அதிகரிப்பு தனியார் துறையினருக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (வி)

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை