அபிவிருத்திக்கு மாத்திரமே கடன் பெறவேண்டும்

அநுரவின் பொருளாதாரக் கொள்கை ​வெளியீடு

அரச வருமானம், கடன் சுமை, ஏற்றுமதி -- இறக்குமதி இடைவெளி, அரச வருமானம் குறைவு, உற்பத்தி பொருளாதார வீழ்ச்சி, வருமானப் பங்கீட்டில் சமநிலையின்மை போன்ற ஐந்து பிரதான பிரச்சினைகளை மையப்படுத்தியே நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாக தேசிய மக்கள்

சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியானது ஐந்து விடயங்களின் அடிப்படையிலே நிலவுகிறது. முதலாவது கடன் சுமை. திறைசேரிக்கு கிடைக்கும் நிதியானது கடன் தவணைகளைச் செலுத்தவே போதுமானதாக இல்லை.

இரண்டாவது நெருக்கடியாக ஏற்றுமதி, இறக்குமதி என்பவை காணப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு 22.2 பில்லியன் டொலர் வரை இறக்குமதி செய்துள்ளோம். ஆனால், 11.8 பில்லியன் அமெரிக்க டொலர்தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி 11 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.

மூன்றாவது பிரச்சினையாக அரச வருமானம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. 1996ஆம் ஆண்டின் அரச வருமானமானது தலா தேசிய உற்பத்தியில் 100 இற்கு 23 சதவீதமாக இருந்தது. 2014ஆம் ஆண்டாகும்போது அது 11.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

நான்காவது பிரச்சினையாக உற்பத்தி பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாட்டில் எவ்வித உற்பத்திகளும் இல்லை. அனைத்தும் இறக்குமதியே செய்யப்படுகின்றன. ஐந்தாவது பிரச்சினையாகவுள்ளமை வருமானப் பங்கீடுக்கு இடையிலான இடைவெளியாகும். நாட்டின் அதிகமான வருமானத்தை பெறும் 100 இற்கு 10 சதவீதமானவர்கள் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் 38.4 சதவீதத்தை அனுபவிக்கின்றனர். மிகவும் குறைந்த வருமானத்தை பெறும் 10 சதவீத மக்கள் மொத்த தேசிய வருமானத்தில் 1.1 சதவீதத்தையே அனுபவிக்கின்றனர்.

பொருளாதாரக் கொள்கைகளை எவ்வாறு சமநிலைத் தன்மையுடன் பேணுவதென்பதை அடிப்படையாகக் கொண்டே எமது கொள்கையை உருவாக்கியுள்ளோம். கடன்களைப் பெற வேண்டாமென கூறவில்லை. ஆனால், அவை அபிவிருத்திக்கு மாத்திரமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை