வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள் பணி நீக்கப்பட்டதாக அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தமது கடமையைக் கைவிட்டுச் சென்றவர்களாகக் கணிக்கப்படுவர் என ரயில்வே திணைக்களம் அதிரடியாக அறிவித்தது.

இதற்கிணங்க அறிவிக்காமல் கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து உத்தியோகத்தர்களும் கடமையைக் கைவிட்டுச் சென்றதாக கணிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அதற்கான கடிதம் வழங்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று 7ஆவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை

எதிர்நோக்கியதுடன் ரயில்வே துறைக்கு இது பெரும் நெருக்கடியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

2,500 உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் செய்வதால் இலட்சக்கணக்கான மக்கள் ஒருவார காலமாக பெரும் அவல நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில் சாரதிகள், நடத்துனர்கள், கட்டுப்பாட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரே ஒருவாரகாலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.

இவர்கள் அடிக்கடி தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பயணிகளின் அசௌகரியம் மட்டுமன்றி ரயில்வே திணைக்களமும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்றார்.

ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பேருந்து சேவைகளை இரவு பகல் பாராது நடத்திவருவதாக இ. போ. ச. பிரதி பொதுமுகாமையாளர் சி. எச். ஆர். டி. சந்திரசிறி தெரிவித்தார்.

கடந்த 7 தினங்களாக 5,400 மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்பட்டதாகவும் இதன் மூலம் 83 மில்லியன் வருமானமாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துப் பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலிருந்தும் கொழும்புக்குச் செல்வதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதனைத் தவிர பாடசாலை மாணவர்களுக்காக 747 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு அவசியமான விதத்தில் அவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/03/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக