ஜனாதிபதி தேர்தல் முறை இருப்பதால்தான் சிறுபான்மையினரின் தேவை உணரப்படுகிறது

அமைச்சர் ஹக்கீம்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

விகிதாசார தேர்தல் முறை, ஜனாதிபதி தேர்தல் முறை இருப்பதால்தான் சிறுபான்மை சமூகங்களின் தேவைப்பாடு உணரக் கூடியதாக இருக்கின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை (26) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் என்பதை நினைத்துக் கூட பாரக்காதவர்கள் இன்று பயங்கரவாதிகள் என சொல்லப்படுவது மாத்திரமல்லாமல் காத்தான்குடி மண்ணே பயங்கரவாதத்தின் விளை நிலமாக பார்க்கப்படுகின்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

காத்தான்குடியை தீவிரவாதத்தின் விளை நிலமாக பார்க்கிற ஒரு நிலவரத்திலிருந்து ஏதோ ஒரு வகையில் மீண்டுகொண்டிருக்கின்ற தருணத்திலேதான் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொள்கின்றோம்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி முறைமையையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிற ஒரு தரப்புக்கு தன்னுடைய வாக்குகளை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அல்லது அந்த தரப்புக்கு வெற்றி வாய்ப்புக்கு வசதியாக வாக்குகளை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிக்கு சிலர் இறங்கியிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சியைப் பார்த்து வாக்களிப்பது என்பதை விடவும் தனி நபர்களுடைய குணாம்சங்களைப் பார்த்து அதி உச்ச பதவிக்கு தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானம் எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சியாக இன்று உருவெடுத்திருக்கின்ற சிறீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைவராக உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இனி ஜனாதிபதி பதவியை நினைத்துப் பார்க்க முடியாது.

இரண்டு தடவைகள் இருந்து விட்டார். 18வது திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் சதா காலமும் இருக்கலாம் எனப் பார்த்தால் அதையும் 19வது திருத்தச் சட்டத்தில் இல்லாமல் செய்து விட்டோம்.

ஜனாதிபதி தேர்தலில் 1988க்குப் பிறகு உண்மையாக ஐக்கிய தேசியக் கட்சிகாரர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வில்லை.

ரணசிங்க பிரேமதாசவுக்குப்பிறகு எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்களே போட்டியிட்டனர்.

கடைசி நேரத்தில் இறக்குமதி செய்து வேட்பாளரை கொண்டு வருவது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே பெரிய விரக்தியாக இருந்தது.

போதாக்குறைக்கு அன்மைக்காலமாக உள் முறண்பாடுகளினால் இழுபறிப் பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தான் புது தெம்​ைப கொடுத்தது.

நிச்சயமாக வெற்றியடையக் கூடிய ஒரு வேட்பாளர் இருக்கின்றார் என்பதை அம்பலத்துக்கு கொண்டு வந்து அடையாளப்படுத்தினோம்.

எல்லோருக்கும் தெரியும் ஆனால் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அடக்கி கொண்டிருந்தார்கள். இதை முதலில் முஸ்லிம் காங்கிரஸ் தான் சொன்னது.

எனவே இந்த தேர்தலில் மிக அவதானமாக நாம் நடந்து கொள்வதுடன் நமது சமூகத்தின் எதிர்காலத்தை மையமாக கொண்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், யு.எல்.எம்.என்.முபீன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை