படிப்பினைகளை மறந்தால் அரசியல் 'கத்துக்குட்டிகளாகவே' இருக்க வேண்டும்

படிப்பினைகளை மறந்தால் அரசியல் கத்துக்குட்டிகளாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் '2005ல் நாங்கள் எடுத்த முடிவின் காரணமாக எங்களுடைய விடுதலை இயக்கத்தையும் இழந்து நிற்கின்றோம்' என்றார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் ஸ்ரீ சித்தி நாதர் நாகம்பாள் அறநெறிப் பாடசாலையின் ஆண்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் அறநெறிப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

ஸ்ரீ சித்தி நாதர் நாகம்பாள் அறநெறிப் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் ஸ்ரீ சித்தி விநாயகர் நாகம்பாள் ஆலயங்களின் பிரதமகுருவுமான சிவஸ்ரீ மு.க. உதயகுமாரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறிநேசன் எம்.பி, 'நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிழையான முடிவுகளை நாங்கள் எடுப்போமானால் ஐந்து ஆண்டுகளுக்கு அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். சிலவேளைகளில் பத்து ஆண்டுகளுக்கு அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும்' என்றார்.

'2005ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று நாங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு முடிவை எடுத்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த முடிவுக்குச் சாதகமாக இருந்தது.

நாங்கள் எடுத்த அந்த முடிவால் ஏற்பட்ட விளைவுகள் உங்களுக்குத் தெரியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை