தன் மீதான விசாரணை தொடர்பில் கடும் கோபத்தை வெளியிட்ட டிரம்ப்

ஜனநாயக கட்சியினர் மீது இழிவான வார்த்தை பிரயோகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு வெள்ளை மாளிகைக்கு அழைப்பாணை விடுக்கப்போதாக பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் அறிவித்திருக்கும் நிலையில் அவர்களை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

டிரம்ப் மீதான விசாரணைக் குழு, உக்ரைனுடனான நிர்வாகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஆவணங்களை வெள்ளை மாளிகையிடம் கோரவுள்ளது. இந்த ஆவணங்களே டிரம்ப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

எனினும் ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் மற்றும் தேசத்துரோகிகள் என்று கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி கோபத்தை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி இடையிலான தொலைபேசி உரையாடலை மையமாகக் கொண்ட இந்த விசாரணையை ஜனநாயக கட்சியினர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பின்லாந்து ஜனாதிபதி சோலி நிநிஸ்டோவுடன் இணைந்து கடந்த புதனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மகன் இருவரும், “முழுமையான ஊழல் பேர்வழிகள்” என்றார்.

பிரதிநிதிகள் சபையின் புலநாய்வுக் குழு தலைவர் அடம் ஸ்கிப் மீதே டிரம்ப் அதிக கோபத்தை வெளிப்படுத்தினார். அவரை “நேர்மையற்ற ஸ்கிப்” என்று அழைத்தார். “வெட்கத்தில் அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்தவரின் வார்த்தைகளை ஏற்று ஸ்கிப் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்ததாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த ஒட்டுமொத்த விசாணையும் ஒரு “புரளி” என்றும் “அமெரிக்க மக்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டு” என்றும் குறிப்பிட்டார். எனினும் இந்த விசாணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்.

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் புகார் செய்ததை அடுத்து இந்த சர்ச்சை எழுந்தது.

இவர்கள் இருவரும் தொலைபேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜோ பைடன் 2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக ஜனநாய கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, ஜனாதிபதி டிரம்ப் “இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை