காணாமல் போனோர் தொடர்பான கோட்டாவின் கருத்தால் தமிழ் மக்கள் கொந்தளிப்பு

காணாமல் போனோர் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நகைச்சுவையுடன் கூறிய பதில்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போரின் பின்னர் நிராயுதபாணியான எமது உறவுகளை உயிரோடு ஒப்படைத்தோம்.அவர்களுக்கு என்ன நடந்ததென்று கூற தைரியம் இல்லாமல் திணறுகிறார் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கூறினார். வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை

இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,..

நான் தான் யுத்தத்தினை நடாத்தினேன் என்று கூறிய கோட்டாபய தற்போது நான் செய்யவில்லை என்கிறார். நான் அதிகாரி; யுத்தத்தினை செய்தவர் சரத் பொன்சேகா என்று கூறுகின்றார். நாங்கள் இறுதி போரின் பின்னர் நிராயுதபாணியாக எங்களது உறவுகளை ஒப்படைத்தோம். காணாமல் போனோர் தொடர்பில் கோட்டாபய நகைச்சுவையுடன் கூறிய பதில் எங்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிருவரை ஏமாற்றி விடலாம் என்று கோட்டா நினைக்கக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்று சொல்வது அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். இராணுவம் காணாமல் போனதாக கூறினார். இராணுவம் காணாமல் போவதற்கு காரியகர்த்தாவாக இருந்தவர் கோட்டாபய தான். போரில் இறந்தவர்களின் உடலை பொறுப்பெடுக்காத இராணுவ தளபதிகள் நல்ல நிலையில் இருந்த உடல்களை மாத்திரம் பெற்று சிங்கள மக்களை ஏமாற்றினார்கள். சிதைவடைந்த உடல்கள் சந்திரன் பூங்கா என்று பேசப்படுகின்ற கிளிநொச்சியில் வெற்றி சின்னம் என்ற இடத்தில் எரிக்கப்பட்டன. ஒரு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக இருந்திருந்தால் உடல்களை எரிக்காமல் சிங்கள மக்களை ஏமாற்றாமல் அவர்களிடம் வழங்கி இருக்கலாம்.

நாங்கள் நாடு கோரி அடிபட்ட இனம், தமிழீழ என்ற கோரிக்கையை நோக்காக கொண்டு போராடிய நாங்கள். ஐந்து கட்சிகளும் பதின்மூன்று நிபந்தனைகளையும் வைத்துள்ளன. தனிநாடு என்ற பக்கத்திற்குள் செல்ல முடியாது என்ற கோரிக்கைகளை கூட தீண்டத் தகாததாக இந்த பிரதான கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் பேரம் பேசும் சக்தியை இழந்து விடவில்லை. தமிழர்களுக்கு வேறு வழியில்லை. இவர்கள் நாதியற்றவர்கள். நாங்கள் எந்தவொரு கோரிக்கைக்கும் அடிபணியாமல் வாக்குகளை வழங்குவோம் என்று நினைக்கின்றார்கள்.

இனப்பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை பல இடங்களில் கேட்டிருந்தோம். ஆனால் யாரும் எங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயாராக இல்லை என்றார்.

 

கல்குடா தினகரன் நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை