பக்தாதியை கொல்ல உதவிய உதவியாளரின் துப்பு

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி பல ஆண்டுகளாக எவ்வாறு தலைமறைவாக தப்பி வருகிறார் என்பது பற்றி அவரது உதவியாளர் மூலம் 2018 பெப்ரவரி மாதத்தில் ஈராக்கிய உளவுப் பிரிவுக்கு முக்கிய துப்புக் கிடைத்ததை அடுத்தே அவரை பிடிப்பதற்கு முடியுமானதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர்.

கண்காணிப்பில் இருந்து தப்புவதற்கு மரக்கறி நிரப்பிய மினி பஸ்களில் பயணிப்பது குறித்த மூலோபாயத் திட்டம் பற்றி பக்தாதி தமது தளபதிகளுடன் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியதாக அவரது உதவியாளர்களில் ஒருவரான இஸ்மாயின் அல் எதாவி, அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். எதாவி துருக்கிய அதிகாரிகளிடம் பிடிபட்ட நிலையில் ஈராக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

“பக்தாதி செல்லும் இடங்கள் மற்றும் அவரது மறைவிடம் பற்றி தெரியாமல் இருந்த முக்கிய விபரங்களை பெறுவதற்கு எதாவி வழங்கிய தகவல்கள் ஈராக்கிய பாதுகாப்பு பிரிவுகளுக்கு உதவியது” என்று ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“சிரியாவுக்குள் பல இடங்களில் பங்தாதியை சந்திக்கும் தாம் உட்பட ஐந்து பேர் பற்றிய விபரங்களை எதாவி எமக்குத் தந்தார்” என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் வடமேற்கு பிராந்தியமான இத்லிப்பில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில், பக்தாதி, “பயத்திலும் அழுதபடியும்” இறந்தார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய டிரம்ப், “தாக்குதலின்போது தப்பிச் சென்ற பக்தாதி சுரங்கப்பாதை ஒன்றில் வெடிபொருள் நிரப்பிய ஆடையை வெடிக்கச் செய்து தனது மூன்று குழந்தைகளுடன் கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்திற்கு தனது கொடிய கடும்போக்கு விளக்கம் அளிக்கும் பக்தாதி, உலகெங்கும் நடந்த பயங்கர தாக்குதல்களுக்கு பொறுப்பாக உள்ளார்.

இஸ்லாமிய அறிவியலில் கலநிதிப் பட்டம் பெற்றிருக்கும் எதாவி ஐ.எஸ்ஸின் முன்னணி ஐந்து தலைவர்களில் ஒருவர் என்று ஈராக்கிய உளவு அதிகாரிகள் கருதுகின்றனர். 2006 ஆம் ஆண்டு அல் கொய்தாவில் இணைந்த அவர் 2008 இல் அமெரிக்க படையினரால் நான்கு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிககள் குறிப்பிட்டுள்ளனர்.

மத ரீதியான அறிவுரைகளை பெறுவதற்கு மற்றும் ஐ.எஸ் தளபதிகளை தேர்வு செய்வதில் பக்தாதி, எதாவியின் உதவியை பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு அந்தக் குழு பெரும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து எதாவி தனது சிரிய நாட்டு மனைவியுடன் சிரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அமெரிக்கா, துருக்கி மற்றும் ஈராக் உளவுப் பிரிவினர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் வேட்டையின்போது நான்கு ஈராக்கியர் மற்றும் ஒரு சிரிய நாட்டவர் உட்பட முக்கிய ஐ.எஸ் தலைவர்கள் பிடிபட்டது மற்றொரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

“சிரியாவுக்குள் பக்தாதியை சந்தித்த அனைத்து இடங்கள் பற்றிய விபரங்களையும் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த பகுதிகளில் மேலும் உளவாளிகளை அமர்த்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுப் பிரிவினருடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டோம்” என்று ஈராக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

“மூன்று உதவியாளர்கள் மற்றும் தமது குடும்பத்தினருடன் பக்தாதி இத்லிப்பில் கிராமம் கிராமமாக மாறிவரும் இடத்தை 2019 நடுப்பகுதியில் கண்டறிய முடிந்தது” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இத்லிப் சந்தை பகுதியில் கட்டம்போட்ட தலைப்பாகை அணிந்த ஈராக்கியர் ஒருவரை கண்டது பற்றி தகவலை சிரியாவில் உளாவாளிகள் வழங்கியுள்ளனர். அவரை புகைப்படம் மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பக்தாதி தங்கி இருந்த வீட்டை நோக்கில அவரை உளவாளிகள் பின்தொடர்ந்தனர்.

“நாம் அது பற்றிய விபரத்தை சி.ஐ.ஏவுக்கு வழங்கினோம். அவர்கள் செய்மதி மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கடந்த ஐந்து மாதங்களௌக அந்த இடத்தை கண்காணித்து வந்தனர்” என்று ஈராக் அதிகாரி குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன் பக்தாதி தனது குடம்பத்தினருடன் முதல் முறையாக அந்த இடத்தில் இருந்து மினிபஸ் ஒன்றின் மூலம் அருகில் இருக்கும் கிராமத்திற்க சென்றுள்ளார்.

“அதுவே அவரின் கடைசி தருணமாக இருந்தது” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் பக்தாதி மறைந்திருந்த கட்டடத்திற்கு மேலால் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க அதிரடிப்படையினரை ஏற்றிய ஹொலிகொப்டர்கள் தாழ்வாக மிக வேகமாக பறந்து வந்தது. இந்த தாக்குதல்களை நேரடி வீடியோ ஒளிபரப்பு ஒன்றின் மூலம் டிரம்ப் வொஷிங்டனில் இருந்து நேரடியாக பார்வையிட்டார்.

இந்தக் கட்டடத்தில் பக்தாதி இருப்பது பற்றி கடந்த வியாழக்கிழமை நம்பகமான வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே விரைவாக இந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவுப் பிரிவு வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

தாழ்வான ஹெலி பறப்பதை ஆரம்பத்தில் அந்த கிராம மக்கள் கண்டுள்ளனர். “நாம் மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. எனவே நாம் விட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டோம்” என்று பெயர் குறிப்பிடாத கிராமவாசி ஒருவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பாரிய வெடிப்புகள் இடம்பெற்றன. நுழைவாயில்களில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் படையினர் ஒட்டுமொத்த கட்டடத்தையும் தரைமட்டமாக்கியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பக்தாதி வீட்டுக்கு கீழால் உள்ள நிலத்தடி பதுங்கு குழிக்கி தப்பிச் சென்றுள்ளார்.

அமெரிக்க துருப்புகள் மற்றும் அவர்களின் நாய்கள் தீவிரவாதியை நெருங்கியபோது தனது மரணத்திற்கான அவர் அழுது கூச்சலிட்டார் என்று டிரம்ப் விபரித்துள்ளார்.

“எமது நாய்கள் அவரை துரத்தியபோது, அவர் பதுங்கு குழியின் முடிவை அடைந்தார்” என்று கூறும் டிரம்ப், “அவர் தனது அங்கியை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டதோடு அவருடன் இருந்த மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டனர்” என்றும் குறிப்பட்டார்.

குண்டு வெடிப்பால் பக்தாதியின் உடல் சிதைந்து பதுங்கு குழி மூடியது. எனவே அவரது உடலை எடுக்க துருப்புகள் இடிபாடுகளை தோண்ட வேண்டி இருந்தது.

“பெரிதாக எதுவும் எஞ்சியிருக்கவில்லை. சிறு துண்டுகள் எடுத்து வரப்பட்டன” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மரபணு சோதனை மூலம் அது பக்தாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“பாக்தாதி நோய்வாய்ப்பட்டவர். மோசமான மனிதர், இப்போது அவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்த டிரம்ப், “அவர் ஒரு நாயைப்போல, ஒரு கோழையை போல இறந்துள்ளார்” என்றார்.

அமெரிக்க படையினர் யாரும் கொல்லப்படவில்லை. பாக்தாதியின் ஆட்கள் பலரும் கொல்லப்பட்டனர். பிறர் பிடிபட்டனர் என்று அவர் தெரிவித்தார். அந்த இடத்தில் இரண்டு மணிநேரம் செலவிட்ட அமெரிக்க சிறப்பு படைப்பிரிவினர், "மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருளை" கண்டெடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதேவேளை சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குர்திஷ் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிரியாவில் அய்ன் அல் பைய்தா கிராமத்தில் குர்திஷ் ஜனநாயக படையினர் மற்றும் அமெரிக்க படையினர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஹசப் அல் முஹாஜிர் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்தார்.

ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இறந்த செய்தியை அறிவித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை குர்திஷ் படையினர் வெளியிட்டனர்.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை