கடந்தகால ஆட்சியாளர்கள் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்கள்

கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்கரைப்பற்று நகரில் வியாழக்கிழமை (24) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 71 ஆண்டு கால இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை சீரழித்துள்ளன, கடந்த காலங்களில் இவ் இரு கட்சிகளுக்கும் மக்கள் மாறி மாறி ஆட்சிசெய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்கி வந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் நாட்டை சீரழிக்கும் சக்திகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்து விடாமல் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். நம்பகமான தேசிய சத்தியை பலப்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்கள் குடும்ப ஆதிக்க அரசியலையே நடாத்தி வந்துள்ளார்கள். இவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சூறையாடப்பட்டது.

இந்த அரசாங்கத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் மதவாதம், இனவாதத்தைத் தூண்டி இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. கல்வி, பொருளாதாரம் என்பன சீரழிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர் நாட்டில் இருக்கக் கூடாது. 17ம் திகதி எமது அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை எல்லோரும் சேர்ந்து தோற்றுவிப்போம்.

தேசிய மக்கள் சத்தியானது நாட்டில் வாழும் சகல இன மக்களையும் சமத்துவத்துடன் வாழ வைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவர் அவர் கலாசாரத்துடன் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்படும்.

எங்களது ஆட்சிக் காலத்தில் ஊழல் இல்லாத அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான ஆட்சியாக மாற்றப்படும்.

நாட்டை கட்டியெழுப்புவது முன்னேற்றுவது தொடர்பான தெளிவான வேலைத்திட்டத்தினை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். தற்போது மக்கள் மத்தியில் புதிய இலங்கை குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஊழல் அற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எல்லோரும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.

இந்த நாட்டை சமாதானமும் சுபீட்சமும், அபிவிருத்தியும், நல்லிணக்கமும் மிக்க ஒன்றாக மாற்றியமைப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டுமென்றார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை