கடந்த ஆட்சியாளர்களைப்போன்று மக்களின் பணத்தைச்சூறையாடும் நிலைக்கு அரசு தள்ளப்படவில்லை

கடந்த ஆட்சியாளர்களைப் போல பொதுமக்களின் பணத்தைச் சூறையாடும் அளவிற்கு ஐக்கிய தேசிய அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இல்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் எந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் 2020 ஆகஸ்ட் வரை தற்போதைய அரசாங்கமே ஆட்சியிலிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் எமது அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் எந்த சர்வதேச நாடும் நிதி வழங்க முன்வரவில்லை. அக்காலத்தில் அவர்கள் சிறுவர்களின் சேமிப்பிலிருந்து தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் 500 மில்லியன் டொலரை 9% வட்டிக்கு பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாரிய விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கம் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. சமுர்த்தி உதவி பெறுவோரை மேலும் ஆறு இலட்சமாக அதிகரித்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்கள் உட்பட அனைத்து துறையினருக்கும் சம்பளத்தையும் அதிகரித்துள்ளோம்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் வங்குரோத்து நிலையிலேயே இருந்தது. 56 நாள் நாட்டை குழப்பி அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய போது டொலரின் பெறுமதி 180 ஆக அதிகரித்ததை முழு நாடே அறியும். இன்னும் ஆறு மாதங்கள் அவர்கள் இருந்திருந்தால் டொலர் 250 ரூபாவாக அதிகரித்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை