சிரியாவில் தாக்குதல் நடத்தும் துருக்கி மீது அமெரிக்கா தடை

உடன் யுத்த நிறுத்தத்திற்கு அழுத்தம்

வடகிழக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் துருக்கி மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை கொண்டுவந்திருப்பதோடு உடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெற்றதை அடுத்து குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி கடந்த புதன்கிழமை எல்லை தாண்டிய தாக்குதலை ஆரம்பித்தது. எனினும் குர்திஷ்களை கைவிட்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றது தொடர்பில் அமெரிக்க அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனங்கள் வலுத்துள்ளன.

மில்லியன் கணக்கான சிரிய அகதிகள் திரும்புவதற்காக பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைப்பதற்கும் தனது நாட்டு எல்லை பகுதியில் இருந்து குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படையினரை வெளியேற்றும் நோக்கிலுமே துருக்கி இந்தத் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

துருக்கியில் இயங்கும் பிரிவினைவாதிகளான தடைசெய்யப்பட்ட பீ.கே.கே அமைப்பின் நீட்சியாக சிரிய ஜனநாயக படையினரை கருதும் துருக்கி அவர்களை பயங்கரவாதிகளாக அழைக்கிறது.

இந்நிலையில் வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.

அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார். இதன்படி துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 50 வீதம் அமெரிக்கா அதிகரித்துள்ளது.

துருக்கியுடன் செய்ய இருந்த 100 பில்லியன் டொலர்கள் வர்த்தக உடன்படிக்கையை உடனடியாக நிறுத்தி வைப்பதாகவும், இதுமட்டுமின்றி துருக்கி இரும்பு இறக்குமதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 வீத வரி மீண்டும் விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதில் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், உள்துறை அமைச்சர் சுலைமான் சோய், எரிசக்தி துறை அமைச்சர் பாதி டான்மெஸ் ஆகியோரும் பொருளாதார தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மீதான பொருளாதார தடையை அமுல்படுத்துவது தொடர்பான அதிகாரம் அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

துருக்கி மீதான பொருளாதார தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், குர்திஷ்கள் மீதான இராணுவத் தாக்குதல்கள் குடிமக்களின் உயிர்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குர்திஷ்கள் மீதான தாக்குதலை துருக்கி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அந்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவிரைவாக அழிப்பதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

சிரியாவில் 30 கிலோமீற்றர் (20 மைல்கள்) பகுதியில் உருவாக்கப்படும் ‘பாதுகாப்பு வலயத்தில்’ தற்போது தங்களின் எல்லையில் வாழும் 20 இலட்சம் சிரிய அகதிகளை மீள குடியமர்த்த துருக்கி விரும்புகிறது.

ஆனால், அவ்வாறு குடியமர்த்தப்பட இருப்போரில் பலரும் குர்திஷ்கள் அல்ல, இந்த நடவடிக்கை உள்ளுர் குர்திஷ் மக்களின் இன அழிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நீடித்துவரும் தாக்குதல்களில் பல டஜன் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு குறைந்தது 160,00 பேர் வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சில உதவி அமைப்புகள் தமது சர்வதேச பணியாளர்களை வெளியேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐ.எஸ் படையினரை அழிப்பதற்கு சிரிய ஜனநாயகப் படையின் உதவியைப் பெற்றுவந்த அமெரிக்கா, துருக்கியோடு நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியது. இதனை முதுகில் குத்தும் செயலாகப் பார்க்கும் சிரிய ஜனநாயகப் படை, துருக்கியை எதிர்கொள்ள சிரியாவின் அரசுப் படைகளோடு சமரசத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் சிரியா இராணுவம் நுழைந்துள்ளது. இது துருக்கி மற்றும் சிரிய படைகளுக்கு இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

குர்திஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு நகரான மன்பிஜ்ஜுக்குள் நுழைந்த சிரிய இராணுவம் அங்கு சிரிய தேசிய கொடியை ஏற்றும் வீடியோவை சிரிய அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.

அரச ஊடகமான சானா வெளிட்டிருக்கும் அந்த வீடியோவில் நகரின் பிரதான சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சிலர் சிரிய கொடியை அசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும் காண்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்கள் மன்பிஜ் நகரை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை