பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டால் மாற்று வழியொன்றை நாடுவோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான தீர்மானம் ஒக்டோபர் 5 ஆம் திகதி கை கூடாது போனால், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாற்று வழியொன்றுக்குச் செல்ல நேரிடும். இந்தத் தீர்மானமிக்க மாற்று வழியை, ஒக்டோபர் 6 ஆம் திகதி தேர்ந்தெடுப்போம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இந்த நாட்டில் மிகப் பிரபல்யமான ஒரு கட்சியாகும். இந்தக் கட்சி தொடர்பில் எவருக்கும் விமர்சனம் செய்ய முடியாது என்றும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.

இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (02) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்று பலராலும் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அண்மையில் ஜனாதிபதி குருநாகல் நகரில் நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பில் எதனைக் கூறினாரோ, அதனையே நானும் இன்று உங்கள் முன் நிலையில் கூறுகின்றேன்.

பொதுஜன பெரமுனவுடன் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பில், தீர்மானமிக்க முடிவொன்றை எடுக்கவுள்ளோம். இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது எடுக்கப்படும். இக்கூட்டத்தில், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் சாத்தியப்படாதவிடத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி இறுதித் தீர்மானமொன்றுக்கு வந்து, நாட்டு நலன் கருதி சிறந்த மாற்று வழி ஒன்றைத் தெரிவு செய்வோம். அத்துடன், கோடாபய ராஜபக்ஷ்வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானாலும் கூட, சுதந்திரக் கட்சி சிந்தித்தே செயற்படும்.

எமக்கு எவருடனும் எதிர்ப்போ, குரோதங்களோ கிடையாது. அனைவரையும் அணுசரித்துச் செல்ல வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். ஜனாதிபதியினது கருத்தும் இதுவாகும் என்றார்.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை