அமுல்படுத்தினால் நீர், மின்சார கட்டணங்கள் ஐந்து மடங்காகும்

கோட்டாவின் பொருளாதாரத் திட்டம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதாரத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தண்ணீர் கட்டணம் நான்கு மடங்காகவும், மின்சாரக் கட்டணம் ஐந்து மடங்காகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதற் கட்டமாக ஒரு இலட்சம் பேர் தொழில்வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.

திறைசேரிக்கு நட்டமேற்படாத வகையில் அரச நிறுவனங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக கூறுவதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கியுள்ள அனைத்து நிவாரணங்களும் இரத்துச் செய்யப்படுவதோடு  பெரும் எண்ணிக்கையானோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயமும் ஏற்படுமெனவும் பிரதமர் எச்சரித்திருக்கின்றார்.

அக்மீமன தொகுதியில் போத்தல பொது விளையாட்டரங்கில் (24) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டாவறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கூறியதாவது,

கடந்த 22 ஆம் திகதி மாலபேயில் நடைபெற்ற மொட்டுத் தரப்பின் கூட்டத்தில் அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பேசும் போது அனைத்து அரசு நிறுவனங்களையும் திறைசேரிக்கு நட்டமேற்படாத வகையில் நடத்திச் செல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சின் மூலம் ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரி மூலம் நிதி ஒதுக்கப்படமாட்டாது. அந்த நிறுவனங்கள் சுயமாக இயங்க வேண்டும் என்பதாகும்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு தற்போது 2600 கோடி ரூபாவை திறைசேரி வழங்கி வருகின்றது. அந் நிதி நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிறுவனங்களில் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் பேர் தொழில் புரிகின்றனர். கூட்டுத் தாபனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்திவிட்டால் செலவுகளை குறைக்க வேண்டும். தொழில் புரிவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட நேரிடும். சு-மார் ஒரு இலட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

அதேசமயம் அவர் கூறுவது போன்று திறைசேரி நிதியை நிறுத்தினால் நீர்வழங்கல் சபை அதன் நட்டத்தை ஈடு செய்ய தண்ணீர் கட்டணத்தை நான்கு மடங்காக அதிகரிக்க வேண்டியேற்படும்.

மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 19 ரூபா 12 சததத்தை செலவிடுகிறது. பாவனையாளருக்கு வழங்கப்படுவது 4 ரூபா 19 சதத்துக்குத்தான்.

ஒரு இலட்சம் பேரின் தொழிலை இழக்கச் செய்து, வாழ்க்கைச் செலவை அதிகரித்து நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறார் என்பதை கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும்.

எம்.எ.எம்.நிலாம் 

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை