கொமோடோ தீவை திறந்திருக்க இந்தோனேசிய அரசாங்கம் முடிவு

இந்தோனேசியா அதன் பிரபல சுற்றுலாத் தலமான கொமோடோ தீவை முன்னர் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மூடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் அந்தத் தீவை மூட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் அந்த முடிவு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பயணத் துறையினர், வாழ்வாதாரத்துக்கு சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் உள்ளூர்க் குடியிருப்பாளர்கள் எனப் பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 176,000 க்கும் அதிகமானோர் கொமோடோ தேசியப் பூங்காவைச் சென்று பார்த்தனர். அவர்களில் பலர் அங்குள்ள இராட்சதப் பல்லிகளைப் பார்ப்பதற்காகவே சென்றனர்.

கொமொடோ டிரகன் எனப்படும் அந்தவகை இராட்சதப் பல்லிகள் இந்தோனேசியாவின் கிழக்கிலுள்ள வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. முன்னதாக கொமோடோ தீவிலுள்ள இராட்சதப் பல்லிகளின் இனப்பெருக்கத்துக்கு சுற்றுப்பயணிகளின் வருகை இடையூறு செய்வதாகக் கருதப்பட்டதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அதனை மூட முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் 2002ஆம் ஆண்டிலிருந்து அங்குள்ள இராட்சதப் பல்லிகளின் எண்ணிக்கை நிலையாக இருப்பதாக இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கூறினார்.

தீவில் 1700க்கும் அதிகமான இராட்சதப் பல்லிகள் இருப்பதாகவும், அவற்றின் எண்ணிக்கை குறைவது தொடர்பில் மிரட்டல் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை