இலங்கையின் வளர்ந்து வரும் நட்சத்திரம்

வனிந்து ஹசரங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் கடந்தகால தொடர் தோல்விகளை மறக்கடித்திருந்த தொடர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாஹூரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடர் ஆகும்.

சரியான பதினொருவர் வரிசையொன்றை கட்டியழுப்பத் தவறிவந்த இலங்கை கிரிக்கெட் அணி அதிகமாக விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. ஒரு சில போட்டிகளில் திடீரென இலங்கை அணி எழுச்சி பெற்றிருந்தாலும், தொடர் வெற்றியென்பது இலங்கை அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, ஒரு சில முன்னேற்றங்கள் இருந்தாலும், ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளில் தொடர் வெற்றியென்பது இலங்கை அணிக்கு சுவைக்க முடியாத கனியாக இருந்தது. எனினும், சிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற அணிகளை வீழ்த்திய இலங்கை அணிக்கு தொடர் வெற்றி கிட்டியிருந்தாலும், பலம் வாய்ந்த அணிகளுக்கு சவால் கொடுக்க தடுமாறியிருந்தமை பெரும் பின்னடைவாகவே இருந்தது.

கடைசியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தமை அணியின் பலவீனத்தை தெளிவாக காட்டியிருந்தது.

இப்படி, தொடர் தோல்விகளுக்கு மத்தியில் பலவீனமாக இருந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணிக்கு எதராக, அதுவும் 20க்கு 20 தரவரிசையில் முதல் இடத்தை பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியை 3--0 என வீழ்த்தி வரலாற்று வெற்றியுடன் நாட்டை வந்தடைத்திருக்கிறது. இதில், பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்திற்கொண்டு முன்னணி வீரர்கள் தொடருக்கு செல்ல மறுக்க, இளம் வீரர்களுடன் சென்றிருந்த இலங்கை அணி இந்த வரலாற்றை படைத்திருந்தது இலங்கை ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தமாகும்.

பாகிஸ்தானில் விளையாடியிருந்த இளம் வீரர்களை கொண்டிருந்த இலங்கை அணி ஒருநாள் போட்டிகளிலும் பிரகாசித்திருந்தது.

அவர்களால் வெற்றியை மாத்திரமே பெறமுடியவில்லை. இப்படி பாகிஸ்தானில் சாதனை படைத்த இலங்கை அணியில் விளையாடிய அத்தனை இளம் வீரர்களும் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி, அடுத்தடுத்த தொடர்களுக்கான இடத்தை தக்கவைத்திருக்கின்றனர்.

இந்த தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, இலங்கை அணியின் எதிர்காலம் என வர்ணிக்கப்பட்டு வருகின்றார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 20க்கு 20 உலகக் கிண்ணத்தில் அணிக்கு முக்கியமான சுழல் பந்துவீச்சாளராகவும் இவர் இருப்பார் என்ற நம்பிக்கையும் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை அணி அதிக வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள். எந்தவொரு ஆடுகளத்திலும் நுணுக்கமாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு, எதிரணிக்கு அழுத்தத்தையும் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர்கள்.

அதற்கு முக்கிய உதாரணமாக முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத் மற்றும் துடுப்பாட்ட வீரர்களாகவும் இருந்த சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா என வீரர்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், கடந்த சில வருடங்களாக இலங்கை அணியில் முன்னணி சழல் பந்துவீச்சாளருக்கான இடைவெளி நீண்டுகொண்டுதான் போகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு 20 என எந்தவகை கிரிக்கெட் போட்டியென்றாலும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய, எதிரணிக்கு சவால் விடுக்கக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை. அதிலும், தற்போதைய காலத்தில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. காரணம், துடுப்பாட்ட வீரர்கள் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறி வருகின்றனர்.

சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறி வருவதை அறிந்த இலங்கை கிரிக்கெட் அணி, பல்வேறு புதிய வீரர்களுக்கும், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த அனுபவம் மிக்க வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால், உள்ளூர் போட்டிகளில் பிரகாசிக்கும் சுழல் பந்துவீச்சாளர்கள் சர்வதேச அளவில் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.

இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய அணிக்குள் நுழைந்ததும், இந்த இடைவெளி சற்று குறையத் தொடங்கியது. அகில தனஞ்சயவின் நேர்த்தியான பந்துவீச்சும், அவரது மணிக்கட்டு சுழலும் இலங்கை அணிக்கு ஒரு புது தெம்பினை வழங்கியிருந்தது. காரணம், அவர் விளையாடிய போட்டிகளில் சரியான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியும், எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்தும் வந்தார்.

அகில தனன்ஜய விட்டுச்சென்ற இடத்தை வனிந்து ஹசரங்க ஒரு சகலதுறை வீரராக ஈடு செய்வாராயின், இலங்கை அணிக்கு இதுவொரு பாரிய பலமாக அமையும். ஏனெனில் பாகிஸ்தான் சென்று முதல் நிலை 20க்கு 20 அணியின் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளராக தினறச்செய்தது மாத்திரமின்றி, இவரது துடுப்பாட்டமும், களத்தடுப்பும் மிகச்சிறப்பாகவே இருந்தது.

துடுப்பாட்டத்தில் ஓரிரு பந்துகளை எதிர்கொண்டாலும், அவரால் துடுப்பெடுத்தாட முடியும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் தோற்றுவித்திருக்கிறார்.

அதேநேரம், அவரது களத்தடுப்பு அதனை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மைதானத்தில் அவரிடம், செல்லும் ஒவ்வொரு பந்துகளும் நொடிப்பொழுதில் விக்கெட் காப்பாளரை அடைவதும், பௌண்டரி எல்லையை கணப்பொழுதில் கவனிப்பதும், பிடியெழுப்புகளை இலாவகமாக எடுப்பதும் என ஒரு முற்றுமுழுதான இளம் சகலதுறை வீரர் ஒருவராக வனிந்து ஹசரங்க இலங்கை அணிக்கு கிடைத்துள்ளார்.

இத்தனை திறமைகள் உடைய வனிந்து ஹசரங்க, தொடர்ந்தும் தனது திறமைகளை வெளிக்காட்டி, மேலும் திறமைகளை வளர்த்து, இலங்கை அணியின் முதன்மை சுழல் பந்துவீச்சாளரின் இடைவெளியை போக்கி, இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே எமது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை