தமிழ் வேட்பாளரை நிறுத்துவதையோ, தேர்தலை பகிஷ்கரிப்பதையோ நாம் விரும்பவில்லை

கூட்டமைப்பின் பங்காளி கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

இந்த தேர்தலை பகிஷ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை. வெற்றிபெறக்கூடியவருக்கு வாக்கை அளிக்காமல் வேறு நபருக்கு அளித்தால் அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் எம்மை பழி வாங்குவார்கள் என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கிறது.

அத்துடன் கோட்டாபய தொடர்பாகவும் எமது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் எதிர்கின்ற ஒருவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்து விடுமோ என்ற பிரச்சினை இருக்கிறது. அத்துடன் நாம் சரியான ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை, அவர்கள் அந்த கட்சிகளோடு இல்லை என்ற தோற்றபாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே எம்மை பொறுத்த வரை வெற்றிபெறும் வேட்பாளரிடம் எமது கோரிக்கையினை முன்வைத்து அதை நடைமுறைபடுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அந்த கோரிக்கையினை முன்வைக்க வேண்டும். அப்போது அது பெறுமதியானதாக இருக்கும். இம்முறை தேர்தலில் எமது தரப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் ஆதரிக்க முடியும். எமது கட்சியும் அதில் உறுதியாக உள்ளது.

எமது கோரிக்கைகளை எடுத்தெறிந்தவர்களுக்கு எமது மக்களின் வாக்குகளை பெற்றுகொடுப்பது தவறான விடயம்.

வேட்பாளர்களுடன் பேசும் போது இதனை நாம் வலுவாக கூறுவோம். அவர்களது வெற்றிக்காக அவர்கள் எமது கோரிக்கைக்கு ஒத்து வரவேண்டும் என்பதுவே எமது கருத்து. ஒற்றுமையாக அதனை முன்வைக்கும் போது அது சாத்தியமாகும். அப்படி இல்லையாயின் என்ன செய்யலாம் என்று நாம் யோசிக்கலாம் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை