ஹிட்லர், இடி அமீன் யுகமா சுதந்திரமுள்ள ஜனநாயகமா ?

மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்ேக உண்டு

சஜித் பிரேமதாச

நாட்டுக்கு சர்வாதிகார தலைவரொருவரா அல்லது ஜனநாயக நெறிமுறைகளைக் கொண்ட தலைவரா தேவையென்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடப்பாட்டை ஊடகத்துறையினர் கொண்டிருப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "வென்ற சுதந்திரத்தைப் பாதுகாப்போம், சர்வாதிகாரத்திற்கு வேலி கட்டுவோம்" என்ற கருப்பொருளில் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பயங்கர சம்பவங்களை ஊடகவியலாளர்கள்

மறக்கப்போவதில்லை. பாசிச ஹிட்லராகவோ இடிஅமீன், ரொபர்ட் முகாபே போன்ற சர்வாதிகாரியாவோ நான் இருக்கப் போவதில்லை. எனது இளமைப்பருவம் முதல் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அந்த நம்பிக்கை கடைசிவரை தொடரும்.

ஊடகத்துறையை நம்பிக்கை கொண்டதாக பலப்படுத்த வேண்டும். அதன் செயற்பாடுகள் பக்கசார்பான அரசியலிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக இயங்க வேண்டும். ஊடகச் செயற்பாடுகளை நான் எப்போதும் சாதகத்தன்மையுடனே பார்க்கின்றேன். இதன் காரணமாகவே 1994 முதல் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகின்றேன்.

ஊடகவியலாளர்கள் பொறுப்புக்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். நான் ஒருபோதும் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டது கிடையாது. குறைந்த பட்சம் ஊடகவியலாளர்களைக் கோபத்துடன் நோக்கியது கிடையாது. இந்த ஊடகத்துறையை நாங்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி எனக்கு கிட்டுமென்று நம்புகின்றேன். அதற்கான பாரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச தரத்திலான ஊடக வளங்களைக் கொண்ட பயிற்சி மத்திய நிலையமொன்றை ஏற்படுத்துவது குறித்து நான் திட்டமிட்டிருக்கின்றேன். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

நான் ஏற்கனவே ஊடக கிராமம் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அதனை விரிவுபடுத்தி வீடுகளற்ற அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வீடும் காணியும் கிடைக்க வழிசெய்வேன். அதேசமயம், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

இவற்றையெல்லாம் செய்வதாகவிருந்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்ந நாட்டின் ஜனநாயக ரீதியிலான ஜனாதிபதியாக நான் தெரிவுசெய்யப்பட வேண்டும். மக்களுக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய செய்தி இடியமீன் ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரியை தெரிவுசெய்வதா அல்லது ஜனநாயக கோட்பாட்டில் செயற்படும் இந்த சஜித் பிரேமதாசவை தெரிவுசெய்வதா இந்தச் செய்தி ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களிடையே சென்றடையவேண்டும்.

இந்த வைபவத்தில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க ஆகியோருடன் முஜிபுர் ரஹ்மான், மனுஷ நாணயக்கார உட்பட பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

எம்.ஏ.எம். நிலாம்

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை