வவுனியாவில் நீச்சல் அக்கடமி

வவுனியாவில் முதற்தடவையாக நீச்சல் பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா நீச்சல் அக்கடமி (Vavuniya Swimming Academy) எனும் பெயரில் இந்த பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா தவசிக்குளம், சேவாவிலேஜ் ரெஸ்ட் நீச்சல் தடாகத்தில் இந்த பயிற்சி நிலையம் 2 ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

'வவுனியாவில் நீச்சல் பயிற்சிகள் எதுவும் இல்லை. நீச்சல் விளையாட்டை தாண்டி ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. எமது நாடு நாலுபக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது. வவுனியாவில் கிட்டத்தட்ட 625 குளங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஆறுகளிலும் குளங்களிலும் உயிரிழப்பவர்கள் வவுனியாவில் அதிகமாக காணப்படுகிறார்கள்.

நீச்சல் தெரியாமையே இதற்குகாரணம். வவுனியாவில் புதிய விடயங்களையும், வவுனியா மக்களையும் முன்னேற்றும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்கும் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறோம். அந்தவகையில் இந்த நீச்சல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்துள்ளோம்' என வவுனியா நீச்சல் அக்கடமியை உருவாக்கியுள்ள விமலசந்திரன் மற்றும் சபேசன் ஆகியோர் தெரிவித்தனர். வவுனியாவில் தொழில்சார் ரீதியாகவும், தரத்தை பேணும் வகையிலும் இந்தநிலையத்தை தொடர்ச்சியாக நடாத்தவிருப்பதாகவும் மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

நீச்சல் பயிற்சிகளை முறையாக பயின்று, உயிர்பாதுகாப்பு நீ ச்சல் சான்றிதழை கொண்டுள்ள வரும், நீச்சல் தடாகத்தில் பயிற்சிகளை பெறாமல் முல்லைத்தீவு கடலில் நீந்தி பயிற்சிகளை பெற்று தேசிய ரீதியில் நான்காமிடத்தை பெற்றுக் கொண்ட சி.ஸ்ரீஜனனன் வவுனியா நீச்சல் அக்கடமியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

04 வயது முதல் 50 வயதுவரை நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ள இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான தனியான பயிற்சிகள் பெண் பயிற்றுவிப்பாளர்களால் வழங்கப்படவுள்ளன சிறுவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள், பெரியவர்கள் என தனித்தனியான பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. பயிற்சிகள் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும்காலங்களில் சகல நாட்களிலும் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

'இந்த பயிற்சி நிலையம் 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டியது. அந்தளவு நாம்பின்னுக்கு நிற்கிறோம். இந்தநிலையம் ஆரம்பிக்கப்பட்ட தன் மூலம் வவுனியாவில் நீச்சல் வீர,வீராங்கனைகளை உருவாக்க முடியும். அவர்களை போட்டிகளில் பங்குபற்ற செய்யமுடியும். இந்த நீச்சல் அக்கடமியை உருவாக்கிய விமல் மற்றும் சபேசன்ஆகியோருக்கு விளையாட்டுதுறை சார்ந்தவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்' என வவுனியா மாவட்ட விளையாட்டுஅதிகாரி பர்சூக் தனது உரையில் தெரிவித்தார்.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை