ஆளுமையை வளர்ப்பதில் அறநெறி கல்வி உறுதுணையாக அமைகின்றது

அம்பாறை மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் ஜெகதீஸன்

மாணவர்களின் அறிவை மேம்படுத்துதல், ஒழுக்க விழுமியங்களை கற்றுக் கொடுத்தல், ஆன்மீகம், ஆளுமை போன்றனவற்றை வளர்தெடுப்பதில் அறநெறிக் கல்வி உறுதுணையாக அமைகின்றது என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் தெரிவித்தார்.

அறநெறி விழா - 2019 பிரதான நிகழ்வு நேற்றுமுன்தினம் (29) நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அறநெறி கொடி தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் என்பன நாவிதன்வெளி பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

'பூரணத்துவமான ஆளுமை பண்பிற்கு அடிப்படை அறநெறிக் கல்வி' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் அறநெறிக் கல்வியின் முக்கியத்தவத்தை வலியுறுத்தும் பதாகை பிரதம அதிதியினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறநெறி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு விளாவடி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.அதிசயராஜ், நிருவாக உத்தியோகத்தர் கே.யேகேஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச ஆலயங்களின் தர்ம கத்தாக்கள் என பலர் கலந்து கொண்டனர். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்து மதத்திலேயே சொல்லப்பட்ட விடயங்கள் ஒரு சமுதாயத்திற்கு சொல்லப்பட்ட விடயங்கள். இளம் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக அறநெறிக் கல்வியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் ஆலயங்கள் மக்களிடையே ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்க்கும் மத்திய நிலையமாக அமைந்திருந்தது.

இந்து சமய ஆன்மீக கொள்கை ஊடாக நல்ல சமுதாயத்தை உருவாக்க அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அந்த சமூகத்திலுள்ள நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை