தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை

தேர்தல்கள் வரும்போது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதியுச்ச வாக்குறுதிகளை வழங்குவது தான் வழமை. அதில் குறிப்பிடுவது எல்லாவற்றையும் நிறைவேற்றுவதும் இல்லை. எனவே நாம் நிதானித்தே முடிவெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்.நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழரசுக் கட்சியிலிருந்து எவரும் என்னை கருத்துக்களை வெளியிட வேண்டாம் என வாய்ப் பூட்டுப் போடவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றேன். அத்துடன் கட்சியின் தலைவரோ செயலாளரோ நான் ஊடகங்களுக்கு கருத்துக்களை கூறக் கூடாது என கூறவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவான கருத்தை கூறியுள்ளார்.

அதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை எடுக்கும் என கூறியுள்ளார். 

இதனை நான் வரவேற்கின்றேன். ஏனெனில் தேர்தல் விஞ்ஞாபனம் கூட எழுத்து மூலமான ஆவணத்துக்கு நிகரானது.

தேர்தல்கள் வரும் போது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதியுச்ச வாக்குறுதிகளை வழங்குவதுதான் வழமை. அதில் குறிப்பிடுவது எல்லாவற்றையும் நிறைவேற்றுவதும் இல்லை.

ஆகவே சிலவற்றை நிறைவேற்றாது விட்டால் நாம் அதனை எமக்கு சாதகமாக்கி நாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசி, அழுத்தம் கொடுத்து செய்யுமாறு வலியுறுத்தலாம் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 10/04/2019 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை