சிரியா தொடர்பான டிரம்பின் கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய எர்துவான்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எழுதிய கடிதத்தை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குப்பைத்தொட்டியில் போட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதிய கடிதத்தில் “கடினமாக இருக்க வேண்டாம். முட்டாளாக இருக்க வேண்டாம்” என்று எர்துவானுக்கு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கடிதம் எர்துவானால் “முற்றாக நிராகரிக்கப்பட்டது” என்று துருக்கி ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள்காட்டி பி.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த கடிதம் கிடைக்கப்பெற்ற தினத்திலேயே துருக்கி சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

குர்திஷ் போராளிகளை கைவிட்டு படைகளை வாபஸ் பெற்றது தொடர்பில் டிரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் செயல் துருக்கியின் தாக்குதலுக்கு பச்சைக் கொடி காண்பிப்பதாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இதில் டிரம்பின் சொந்தக் கட்டிசியில் இருந்தே அதிக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே எர்துவானுக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில், “பேச்சுவார்த்தை மூலம் குர்திஷ் படையினருடனான பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கு நீங்களும் பொறுப்பேற்கத் தேவையில்லை. துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக நானும் பொறுப்பேற்கத் தேவையில்லை. நீங்கள் சரியான வழியில் செயல்பட்டாலும், மனிதாபிமான வழியில் நடந்தால் மட்டுமே உலகம் உங்களை சாதகமாகப் பார்க்கும். கடினமான நபராக இருக்காதீர்கள். முட்டாளாக இருக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த குர்திஷ் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையை அழித்து அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பகுதியை உண்டாக்கும் நோக்கத்துடன் துருக்கி இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஐ.எஸ். படையினரை அழிக்கும் போரில் குர்திஷ் படையினர் உதவியைப்பெற்று வந்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு முன்னதாக தமது படையை பின்வாங்கியது.

சிரியாவில் அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொண்ட டிரம்பின் முடிவை கண்டித்து, ஜனநாயக கட்சி மற்றும் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக வாக்களித்திருந்தனர்.

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை