கோட்டாபயவுக்கு ஆதரவாக உதயமாகிறது புதிய அமைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர−பொதுஜன கூட்டணி

ஒக்.31 இல்  அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஒக்டோபர் 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி ஸ்தாபிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்காதென்றும் அவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் உத்தியோக பூர்வமாகவோ, உத்தியோகபூர்வமற்ற விதத்திலோ எவ்வித சந்திப்புக்களும் நடத்தப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று

 

ராஜகிரியவிலுள்ள புதிய ஊடக நிலையத்தில் நடத்தப்பட்டது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சஹ்ரானுடன் இருப்பதாக வெளியாகியுள்ள புகைப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சரமாறியாக கேள்விகளை தொடுத்தனர். இக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள அப் படங்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் கிடைக்கும்வரை எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க இயலாது. எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்வது தொடர்பில் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. எதிர்வரும் 31 ஆம் திகதி கூட்டணியின் மேடையில் அவர் இருக்க மாட்டார்.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பலர் கோட்டாபயவுக்கு வாக்களிப்பார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு. இம் முறை 67 சதவீதத்திலும் அதிக வாக்குகளைப் பெற்று கோட்டாபய அமோக வெற்றியீட்டுவது உறுதி.

 

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை