நகரசபை: சாய்ந்தமருதின் முடிவு முழு முஸ்லிம்களையும் பாதிக்கும்

நகரசபை விடயத்திற்காக சாய்ந்தமருது மக்கள் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்குமென அமைச்சர் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபைக்கும் , கட்சி முக்கியஸ்தர்களுக்குமான கலந்துரையாடல் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கருத்துரைத்த போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த கல்முனை மாநகரசபை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றியும் பெற்றனர். அத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதனால் கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்ட சரிவையும் தாங்கிக் கொள்கின்றோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சாய்ந்தமருதிற்கு கூட்டிவந்து கோட்டாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கோரியமை நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயற்பாடாகும். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சாய்ந்தமருதிற்கான தனியான நகர சபை தொடர்பாக ஒவ்வொரு அரசியல் வாதிகளிடமும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர்களும் அதனை தருவதாக வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். மாற்று சக்திகளின் தலையீட்டின் மூலம் இப்பிரச்சினையை இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி ஒருநாளும் பெறுமதியற்றுப் போகாது.

கல்முனை மாநகரசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை நாங்கள் புறந்தள்ளவும் முடியாது , அவர்களில்லாது தீர்வுகளை நோக்கி வெவ்வேறு திசைகளிலும் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக நாங்கள் ஒற்றுமைப்பட்டு அதிகாரங்களை எங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எங்களுக்கிடையிலான அதிகார ரீதியிலான சமன்பாட்டை சீர்செய்து கொள்ள முடியும். பேச்சு வார்த்தையின் அடிப்படையில் எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைக்காக முழு சமூகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது எங்களை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடும். அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். இந்த விடயத்தில் நாங்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுவதே ஆரோக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை