தலைமை சரியில்லை என்பவர்கள் அதனை ஏற்று நடத்த முன்வர வேண்டும்

தமிழ் மக்களின் தலைமை சரியில்லை என்றும் தமிழ் மக்களுக்கு தலைமைத்துவம் இல்லை என்றும் கூறுபவர்கள் அந்த தலைமையை ஏற்று நடத்த முன்வர வேண்டும். அதற்கு துணிவு இல்லாதவர்கள் பின் வரிசையில் இருந்துகொண்டு செய்கின்றவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் சரித்திரங்கள் மாற்றப்படக் கூடாது, உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எமக்கு எதிரான வரலாறுகளை வைத்துக் கொண்டு இன்றைய நிலையை மாற்றி விடவும் முடியாது இது தொடர்பாகவே நாம் அனைத்து அரசாங்கங்களுடன் பேசி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் இடம்பெற்ற என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம் எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சரித்திரங்களின் உண்மைகள் சில எமக்கு ஏற்புடையதாக இல்லாத போது இவற்றை விட்டுவிட்டு எமது சரித்திரத்தை நமக்கு ஏற்றால் போல் பேசுகின்றோம். இது மாற்றப்பட வேண்டும். இதனால் இன்றைய உண்மை நிலையை யாரும் மாற்றிவிட முடியாது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு மதங்களின் ஆக்கிரமிப்பு என்பது வந்து போவதும் ஏற்கனவே இருந்ததை வருபவர் அழிப்பதும் வழமை.

அதுதான் காலாகாலமாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது. அதற்கு எமது சரித்திரத்திலேயே பல உதாரணங்கள் உள்ளது. ஆயினும் சரித்திரத்தை பொய்யாக்கிவிட முடியாது. இரண்டு மாதங்களாக கன்னியா விடயத்தை கையளித்தும் எதுவும் இடம்பெறாத நிலையில் இரண்டு நாட்களில் கன்னியா பிரச்சினை

தொடர்பாக இடைக்கால தடை உத்தரவு எம்மால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

நாங்கள் தலைமை இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் இப்போதுள்ள பெஸன். தலைமை இல்லாமல் இருக்கின்றோம் என்பவர்கள் தாங்கள் தலைவர்களாக வரவேண்டும். ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?. உங்களுடைய சமூகத்தைப் பற்றி ஒரு ஏக்கம் இருப்பவர்களாக இருந்தால், எங்களுடைய சமூகத்திற்கு ஒரு தலைமை இல்லை என உண்மையாகவே நீங்கள் நினைப்பாராக இருந்தால், முன் வாருங்கள் தலைமையை ஏற்று நடாத்துங்கள்.

அதைவிடுத்து ஏன் பின் கதிரையிலே இருந்து கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?. பொறுப்பு இல்லையா உங்களுக்கு?. மக்கள் முன்னால் வாருங்கள். தலைவர் என்று சொல்லுகிறவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி தலைமையை கையில் எடுங்கள். அந்த துணிவு இல்லாதவர்கள் கொச்சையாக பேசக் கூடாது. அவர்கள் வாய்திறக்க அருகதையற்றவர்கள்.

எங்களுடைய மக்களுக்கு வழிகாட்டுவதற்காகவே நாங்கள் வந்துள்ளோம். வேறு எந்த நோக்கமும் இல்லை. என்னுடைய தொழிலை நான் தொடர்ந்து செய்திருந்தால் இங்கு வந்து சிரமப்பட்டு பேச வேண்டிதில்லை. எனக்கு பேச முன்பே பணம் வந்து விடும். வழி இல்லாமல் அரசியிலுக்கு வரவில்லை. சமூகத்தின் தேவையை கண்டு அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள்.

அவர்கள் செய்வது சரி இல்லை, அவர்கள் வேண்டாம் என்றால் ஒதுக்கித் தள்ளுங்கள். முன்னால் வந்து பேசுங்கள். தலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் செய்வதில்லை செய்பவர்களையும் விட மாட்டீர்கள் என்றார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை