ஒற்றுமைப்படாத நிலையில் காணப்படும் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்  அநுரகுமார திசாநாயக்க

“நாட்டு மக்களுக்கான பாதுகாப்பிலும், பொருளாதார வீழ்ச்சியிலும், யுத்த பாதிப்பினாலும் மூழ்கியுள்ள இந்நாட்டை நாட்டு மக்கள் அளிக்கும் வாக்குப் பலத்தின் மூலமும், மக்கள் வழங்கும் தேசிய ஒற்றுமையின் மூலமுமே கட்டியெழுப்ப வேண்டும்.”

இவ்வாறு கடந்த (25) மூதூர் நீர்த்தாங்கி வளாகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் கூட்டத்தில் பேசிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பேசுகையில் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி மூதூர் கிளையின் ஏற்பாட்டில் இக்கூட்டம் இடம்பெற்றது. அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது, எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 71 வருட காலமாக ஒற்றுமைப்படாத நிலையில் காணப்படும் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

எமது அரசியலில் இனவாதம், அடிப்படைவாதம் என்ற குறிக்கோளை உருவாக்கப் போவதில்லை. பொலிஸ் பாதுகாப்பு, இராணுவ பாதுகாப்பு என்றெல்லாம் மக்கள் கூறுமிடத்து இன்று எதற்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதற்கான வழி தேசிய ஒற்றுமையை உருவாக்குவதுதான்.

மதச் சுதந்திரங்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கான அந்தஸ்துக்களை வழங்க வேண்டும். ஒரு கலாசாரத்தை அழித்து இன்னொன்றை மாற்ற முடியாது. உரிய சமயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை யுத்தத்தால் கட்டியெழுப்ப முடியாது.

மக்களின் சொத்துக்களை சூரையாடியவர்கள் பலர் உள்ளனர். இக்களவை இல்லாமல் ஆக்க வேண்டும்.

வறுமை அடைந்த நிலையில் உள்ள நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, தொழில்வாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி என முடக்கப்பட்டுள்ள வளங்களை மேலோங்கச் செய்து அரசியல்வாதிகள் செல்வமடைவதை தடுத்து முழு ஊழலையும் இல்லாமல் ஆக்குவோம்.

இந்நிலையில் மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது இவ்வாறான ஆபத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கப் போகின்றீர்களா?

சிறந்த கல்வியின் ஊடாக பல கைத்தொழில்களை உருவாக்க முடியும். இதற்காக நல்ல முதலீட்டார்களை உருவாக்குவோம். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நாட்டை நாசமாக்கிய ஆட்சியாளர்களுக்கும், ஆட்சிக் கும்பலுக்கும் அவ்வாறான கட்சியில் இருந்துவரும் புதிய முகங்களுக்கும் இனியும் ஏமாறக்கூடாது. தேசிய மக்கள் சக்தி மக்கள் பலத்துடன் உருவெடுத்துள்ளது.

மேலும் சிறப்பானதொரு நாட்டையும், சகல பிரதேசத்தையும் வளமாக உருவாக்குவதற்காகவும் உரிய பாசறையில் சகல கடமைகளையும் மக்கள் மயமாக்கி சிறப்பானதொரு நாட்டை உருவாக்குவோம் என்றார்.

 

(மூதூர் தினகரன் நிருபர்)

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை