முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவிடம் சந்தர்ப்பவாத அரசியலை காணவில்லை

நினைவு தின வைபவத்தில் ஆளுநர் முஸம்மில்

முன்னாள் ஆளுநர் மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்லவென மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

பலம்பெரும் அரசியல்வாதியும் பிரபல தொழிற்சங்கவாதியும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமாகிய மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் நினைவு தின வைபவமொன்று கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பன்னில ஆனந்த ஹிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனம் ஏற்பாடு செய்த இவ்வைபவத்தில், முன்னாள் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஹேமச்சந்திர, அலவி மௌலானாவின் ஞாபகார்த்த உரையை நிகழ்த்தினார். உளவியல் ஆலோசகர் அஷ்ஷெய்க் யு.கே. ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில், ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில், அலவி மௌலானா அரசியலை சந்தைப்படுத்திய ஒருவர் அல்லவென்றும், பணத்திற்காக கட்சி தாவும் ஒரு அரசியலை அவர் செய்யவில்லையென்றும் தெரிவித்தார். அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியென்றும், ஆட்சி மாறும் போது கட்சி தாவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

1978ம் ஆண்டு காலப் பகுதியில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்ட போது பல்வேறு தாக்குதல்களுக்கும் அலவி மௌலானா இலக்கானார். சைக்கிள் சங்கிலிகளைக் கொண்டும் அவர் தாக்கப்பட்டார். எத்தனை சவால்கள் வந்த போதிலும், அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. இதுவே நாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் பாடமாகும். அத்தோடு முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து அவர் அரசியல் செய்யவுமில்லை. ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படாத விஷேட பண்புகள் அவரிடம் காணப்பட்டன. முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர் தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்துள்ளார். தேர்தல் காலங்களில் முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பது மிகவும் குறைவு. இருந்த போதிலும் இடதுசாரி அரசியல் கொள்கைகளில் திடமான உறுதிப்பாட்டுடன் இருந்த ஒருவராகவே ஆளுநர் அலவி மௌலானாவை பார்க்கின்றோம். கலாநிதி பதியுதீன் மஹ்மூத், அலவி மௌலானா போன்றவர்கள் எதிரணியில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை