கோட்டா, சஜித், மஹிந்த முஸ்லிம் பிரச்சினைகளை தீர்க்கமாட்டர்

திங்களன்று தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

எங்களைப் பொறுத்தவரையில் சஜித், கோட்டாபய, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க அனைவரும் ஒன்றுதான். இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர மாட்டார்களென ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-, இந்த தேர்தல் களத்தில் குதித்திருப்பது மிகவும் பயங்கரமான, நெருப்பு குழிக்குள் காலை விட்ட சூழ்நிலையில் தான் களத்தில் இறங்கியுள்ளேன்.  

என்னை துரோகி என்கின்றார்கள், பச்சோந்தி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் வாக்கை பிரிக்க வந்த காட்டிக் கொடுக்கும் துரோகி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் எல்லாம் ஆகியோர் மேடைக்கு வந்தால் என்னை திட்டிப் பேசுகின்றார்கள்.  

இவர்கள் சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் பற்றி பேசுவதில்லை. நான் தான் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுவது போன்று ஏசுகின்றனர். ஜனநாயக நாட்டில் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்ற உரிமை எனக்கு இருக்கின்றது.  

நீங்கள் மேடைகளில் உங்களது பிரசாரங்களை செய்யுங்கள்.உங்களது கொள்கை என்ன, ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றீர்கள் என்று சொல்லுங்கள். நான் சஜித் பிரேமதாசாவுக்கு எதிராகவோ, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதாரவாகவோ இந்த தேர்தல் களத்தில் இறங்கவில்லை. 

கல்குடா தினகரன் நிருபர்  

Sat, 10/26/2019 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை