தெரிவுக் குழுவில் சுயாதீனமாகவே செயற்பட்டேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நான் சுயாதீனமாகவே செயற்பட்டேன். யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. அதன் அறிக்கை நடு நிலையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுஜன பெரமுன முகவரான மிப்ளால் தான் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் காத்தான்குடி பொதுஜன பெரமுன அமைப்பாளர் சியாதும் இருப்பதோடு அவரின் படம் நீக்கப்பட்டே காண்பிக்கப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் குறித்து நேற்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த அவர் மேலும் கூறியதாவது,

பாரதூரமானதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுகளை எதிரணி முன்வைத்துள்ளது.எனக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சேறு பூசம் முயற்சியினால் நாம் பின்னடையப் போவதில்லை.எமது கடமைகளை தொடர்வோம்.

பயங்கரவாத வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தேர்தல் நடைபெறும் நிலையில் இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.உண்மை எப்பொழுதும் தோற்காது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் எனக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

2015 இல் நான் சஹ்ரானை சந்தித்ததாக புகைப்படமொன்றை காண்பிக்கின்றனர்.அவருடன் கைகுலுக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் என்ற வகையில் மக்களுடன் கைகுலுக்க தயங்குவதில்லை. எதிர்காலத்தில் கொலையாளியாக வரப் போகும் ஒருவர் என்னுடன் கைகலுக்குவதாக அவர்களின் மனங்களை நாம் வாசிக்க முடியாது. 2016 ஆம் ஆண்டின் பின்னரே அவர் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர் என்பது தெரியவந்தது. அவரை இரகசியமாக சந்திக்கவில்லை.

2005 தேர்தலின் போது புலிகளை தேர்தலை புறக்கணிக்க கோரி சிலர் சந்தித்தார்கள். 2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியை சந்தித்து தேசியப்பட்டியல் எம்.பியானார். அவரின் ஆதரவாளர்கள் தான் எமது ஆதரவாளர்களுக்கு எதிராக காத்தான்குடியில் வன்முறை மேற்கொண்டார்கள்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது காயமடைந்த தாய்மாரை சந்திக்க நான் வைத்தியசாலைக்கு சென்றேன். காத்தான்குடி பொதுஜன பெரமுன அமைப்பாளர் சியாதும் என்னை பற்றி காண்பிக்கும் புகைப்படத்தில் இருக்கிறார். அவர் கோட்டாபயவை காத்தான்குடிக்கு அழைத்து வர தயாராகியுள்ளார். எனக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைத்த மிப்ளால் என்பவர் பொதுஜன பெரமுன முகவராகும்.எனக்கு எதிராக அவரை பயன்படுத்தியுள்ளனர்.முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க ஹிஸ்புல்லா போட்டியிடுகிறார்.மிப்ளாலும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் முஸலிம்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. எனது அரசியல் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியன்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை