தீபாவளி: இன நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட உறுதுணையாகட்டும்

தீபாவளி: இன நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட உறுதுணையாகட்டும்-Deepawali Greetings from President Maithripala Sirisena

ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்றைய தீபாவளி பண்டிகை உறுதுணையாக அமைகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் தமது முயற்சியினால் வெற்றிகளாக மாற்றிக்கொள்ளும் மானிட சமூகம் அவ்வெற்றியையும் அதனால் கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை பல வழிகளில் கொண்டாடுவது உலக வழக்காக இருந்து வருகின்றது. அதேபோல் மனிதர்களின் தீய குணங்களாக கருதப்படுகின்ற அகங்காரம், பொறாமை, கோபம், குரோதம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமை, பாசம் ஆகிய நற்குணங்களை வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் உலகவாழ் இந்துக்களால் தீபமேற்றிக் கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது பௌத்தர்களின் வெசாக் பண்டிகையை போன்று தென்பட்ட போதிலும் இந்துக்களின் இந்த தீபத் திருநாளாகிய தீபாவளியின் அர்த்தம் தீமையின் பக்கமிருந்த நரகாசுரனை அழித்து நன்மையின் பக்கமிருந்த கிருஷ்ணன் பெற்ற வெற்றியின் மூலம் மானிட சமூகத்திற்கு விடுதலையை பெற்றுக்கொடுத்த ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுகூரலே என தெரிய வருகின்றது.

அந்தவகையில் சமூக நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் உறுதுணையாக அமைகின்றன என்பது எனது எண்ணமாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் மட்டுமன்றி இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் செறிந்து வாழும் இந்து பக்தர்களால் பக்தியுடனும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் தீபத் திருநாளாகிய தீபாவளி கலாசார விழாவானது, நம் நாட்டுக்குள் மாத்திரமன்றி ஏனைய நாடுகளுடனும் சகோதரத்துவ பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான ஒரு நிலைமையாகவே அமைகின்றது. ஆகையால் மனித மனங்களில் படர்ந்திருக்கும் மடமை எனும் இருளைப் போக்கி அறிவொளி ஏற்றுவதாக இத்திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி அமைய வேண்டும். உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் இத்தீபாவளி திருநாளில் அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நீண்ட ஆயுளும் அவர்களுக்கு கிட்ட வேண்டுமென மனமார வாழ்த்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Sun, 10/27/2019 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை