தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வெல்வதற்கே தேர்தலில் போட்டியிடுகிறேன்

தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலினூடாகவாது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக பயன்படுத்தும் ​நோக்குடனே தேர்தலில் களமிறங்கியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அது குறித்து கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பிலே ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.

தென்னிலங்கை பிரதான கட்சிகளை எந்த விதமான திட்டவட்டமான வாக்குறுதிகளும் இல்லாமல் பின்பற்றுவது பயனில்லை எனும் கருத்து எமது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓங்கி ஒலித்ததை அடுத்து , இன்றைய தினம் என்னை ஒரு வேட்பளராக முன்னிறுத்தி வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் எனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளேன். ஆனால் சாதாரண உறுப்புரிமையில் கட்சியில் அங்கத்துவம் வகிப்பேன்.

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிடவுள்ளேன். தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். தாயகத்தில் உள்ளவர்களினதும் புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களினதும் வேண்டுகோளின் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன்.

(யாழ். விசேட நிருபர்)

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை