காலிமுகத்திடலில் வரலாறு காணாத மக்கள் வௌ்ளம்

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் வரலாறு காணாத மக்கள் திரள் மத்தியில் இடம்பெற்றது.

இப் பிரசாரக்கூட்டம் பிரதமரும் ஐ.தே. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

நேற்றுக் காலைமுதலே நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் கொழும்பு காலிமுகத் திடலில் திரண்டனர்.

பிற்பகல் 3 மணியளவில் ஜனசமுத்திரத்தின் மத்தியில் கூட்டம் ஆரம்பித்தது.

முக்கியஸ்தர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த நிலையிலும் மக்கள் தொடர்ச்சியாக வருகை தந்தவாறிருந்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நிகழ்வுக்கு வருகைதந்தபோது, பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் மக்கள் அவருக்கு மகத்தான வரவேற்பளித்தனர்.

சஜித் வாழ்க,எங்கள் எதிர்கால ஜனாதிபதியே வருகவென மக்கள் பெரும் கோஷத்துடன் அவரை வரவேற்றனர்.

கட்சியின் முக்கியஸ்தர்கள் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மகிழ்வித்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச, இந்த நாட்டில் இதுவரை அமையாத தூய்மையான அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக சூளுரைத்தார்.

ஊழல் மோசடிகளுக்கு தமது அரசாங்கத்தில் இடமில்லையெனத் தெரிவித்த அவர், அவ்வாறு செயற்படுபவர்கள் எந்தவித பாரபட்சமுமின்றி அரசாங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமதுரையில், சஜித் பிரேமதாசவை புகழ்ந்தார்.

மக்களிடமிருந்து தோன்றும் சிறந்த தலைவர் சஜித் பிரேமதாச என்றும் அவருக்கே நாட்டு மக்களின் பூரண ஆதரவு கிடைக்குமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

மேற்படி பிரசாரக்கூட்டம் இடம்பெற்ற ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் சில வீதிகளை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கொழும்பில் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சிலவற்றில் நேரகாலத்துடன் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. கூட்டம் முடிவுற்று சில மணித்தியாலங்கள் கடந்தும் மேற்படி வீதிகள் வழமைக்குத் திரும்பவில்லை. இரவு எட்டு மணி வரை காலிமுகத்திடலை அண்டிய வீதிகள் மற்றும் கொழும்பு கோட்டைப் பகுதிகளில் பெரும் சனநெசரில் காணப்பட்டது.

மேற்படி பிரசாரக்கூட்டத்தையடுத்து கொழும்பு நகரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. (ஸ)

எம்.ஏ.எம். நிலாம், லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை