ரவூப் ஹக்கீமுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்

கோட்டாவுக்கு வாக்களித்து இலங்கையை  மற்றொரு மியன்மாராக்கி விடாதீர்கள்

பயங்கரவாதி சஹ்ரானோடு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு பட்டதாகக் கூறி சம்பந்தமே இல்லாத பழையதொரு ஒளி நாடாவினை வைத்துக் கொண்டு ஹக்கீமை கைது செய்ய வேண்டும் என நாசகாரச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டொன்றை சுமத்துகின்றார்கள். அவ்வாறான அநாகரியம் மிக்கவர்களின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன், சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சினை வருவதற்கும் நாம் எந்தவொரு  விட்டுக் கொடுப்புக்களையும் புரியப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து சம்மாந்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,...

குறிப்பிட்ட ஓர் சாரார் புரிந்த குற்றத்திற்காக எம்மை வஞ்சித்தார்கள். அரசியல் தலைமைகள் நாம் ஒற்றுமைப்பட்டு நமது முஸ்லிம் சமூகத்திற்காக ஒருமித்து நின்று குரல் கொடுத்தோம். அந்த ஒற்றுமையினால் பல்வேறு நன்மையான விடயங்களை எமது சமூகத்தின் பால் மேற்கொள்ள முடிந்தது.

கட்சி ரீதியாக எம் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் இருப்பினும் சமூகம் ரீதியாக முரண்பாடுகள் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வருகின்றபோது அதனை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க போவதில்லை.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை எவ்வாறு சிதறடிக்கலாம், இந்த சமுதாயத்தினை எவ்வாறு ஏமாற்றலாம் என்ற சதி நடந்து கொண்டிருக்கின்றது. சஜித் பிரேமதாசவிற்கு செல்லவுள்ள வாக்குகளை எவ்வாறு திசை திருப்பி அவரை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்று திட்டமிட்ட சதி முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் பௌத்த மதத்தினைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுள் யார் எமது சமுதாயத்திற்கு நன்மைகளைப் புரியக் கூடியவர் என அடையாளம் கண்டு செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுபலசேனா போன்ற சேனாக்களை எமது நாட்டுக்குள் ஊடுருவுவதற்கும் இனவாத நஞ்சை இந்த நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார் என்தனை இந்த சமூகம் மறந்து விடாது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்து இந்த நாட்டை இன்னோர் மியன்மாராகவும், பர்மாவாகவும் மாற்றி விடாதீர்கள்.

யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவும், பணத்திற்காக சோரம் போயும் நமது முஸ்லிம் மக்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசாவினைத் தவிர வேறு எவருக்கும் அளித்து விடாதீர்கள்.

முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர்கள் நம் முன்னே தோன்றி வெட்கம் இல்லாமல் பொய் வார்த்தைகள் பேசி வருகின்றார்கள். ஜனாதிபதியினை தீர்மானிக்கின்ற சக்தி மிக்க வேட்பாளர்கள் நாம் தான் என்று அவர்கள் வாய் கூசாமல் பொய் பேசித்திரிகின்றார்கள்.

நமது சமூகத்தினை ஏமாற்றி கபட நாடகம் ஆடுகின்ற சதி பல்வேறுபட்ட கோணங்களில் எம்மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் நாம் சோரம் போகாமல் தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டிய பாரியதோர் தார்மீகப் பொறுப்பு இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.

 

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை