மட்டக்களப்பில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த விளையாட்டு அபிவிருத்திச்சபை துரித நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை வளர்ச்சியடையச் செய்ய மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபை துரித நடவடிக்கை எடுத்துவருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவித்திசபையின் தலைவருமான எம். உதயகுமார் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நடவடிக்கைமைய இம்மாவட்டத்தில் உள்ள மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான சத்துணவுகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் அரசாங்க அதிபரின் வேண்டுகோளின் பெயரில் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் நிதி உதவியில் மகளிர் உதைபந்தாட்ட துறையில் ஆர்வமுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் பாதணிகள் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த விளையாட்டு உபகரணங்ளை கையளிக்கும் விசேட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்று (14)நடைபெற்றது.

அரசாங்க அதிபர் உதயகுமார் கலந்து கொண்டு குறித்த விளையாட்டு உபகரணங்களை கையளித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் த.ஈஸ்பரன்,புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் பொறுப்பதிகாரி எம்.ஜெயராஜன்,திட்ட இணைப்பாளர் திருமதி.மேரி ரம்பட் மயூரன் மற்றும் விளையாட்டு திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்

இங்கு அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்: உதைபந்தாட்ட துறையில் மகளிரை ஊக்குவிக்க வேண்டியது மிக அவசியமாகும்.இதன் அடிப்படையில் எமது மாவட்டத்தில் சாதனை படைத்து தேசிய ரீதியில் பங்கு பற்றவுள்ள இந்த விளையாட்டு வீரர்களின் சாதனையை பாராட்டுவதுடன் இதனை ஊக்குவிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தேசிய மட்ட போட்டிக்கு பங்குபெற்ற இருக்கும் மகளிர் குழுவிற்கு நாம் சத்துணவு மற்றும் விளையாட்டு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.இந்த உபகரணங்களை வழங்க முன்வந்த பாதுகாப்பான புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பிற்கு உதவ முன்வந்துள்ளதை இட்டு நன்றி பாராட்டுகின்றேன். அதேபோல் எமது மாவட்டத்தில் எதிர்காலத்தில் எமது மகளிர் விளையாட்டு துறையில் பிரகாசித்து மாவட்டத்திற்கு பெருமைதேடித்தர வேண்டும் என குறிப்பிட்டார்

இந்த மகளிர் உதைபந்தாட்ட உதவித்திட்டத்தின்கீழ் புலம் பெயர்ந்தோர் சர்வதேச அமைப்பின் அனுசரணையில் அரசாங்க அதிபர் உதயகுமார் வேண்டுகோளின் பேரில் நாளை 17 ந்திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றும் காலை 8.30 மணி அளவில் ஆரம்பித்து இதன் இறுதிப்போட்டிகள் பிற்பகல் 2.30 மணிக்கும் நடத்தப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் இம்மாவட்டத்திலுள்ள முன்னணி மகளிர் கால்பந்தாட்ட கழக அணிகள் பங்குபெற்ற இருக்கின்றன.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை