கட்சியிலிருந்து விலகமாட்டேன் முடிந்தால் பதவி நீக்கிக்காட்டுங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, முடிந்தால் அமைச்சுப் பதவியிலிருந்து தம்மை நீக்கிக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ஐ.தே.கவின்  உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுமுன்தினம் விசேட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று விசேட உடகவியலாளர் மாநாட்டடை நடத்திய இராஜாங்க அமைச்சர் வசந்தசேனாநாயக்க தெரிவித்ததாவது:

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் நான் வகிக்கும் அமைச்சுப் பதவியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன். ஜனாதிபதியிடம் கடிதமொன்றை கையளித்து அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கே தீர்மானித்திருந்தேன். ஆனால், கட்சியிலிருந்து, பதவியிருந்தும் நீக்கப்பட்டமையால் அதற்கு எதிராகவே செயற்படுவேன். ஜனாதிபதியால்தான் எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. ஜனாதிபதியால் மாத்திரமே எனது அமைச்சுப் பதவியையும் பறிக்க முடியும். ஆகவே, முடிந்தால் அமைச்சுப் பதவியிலிருந்து என்னை நீக்கிக்காட்டுமாறு சவால் விடுகிறேன்.

ஐ.தே.க தவிசாளர் கபீர் ஹாசீம் தமக்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தவறுதலாக நடைபெற்றதென கூறினார். அது தவறான விடயமெனின் ஊடகங்களில் பகிரங்கப்படுத்துமாறு நான் அவருக்கு பதிலளித்தேன். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாம் ஆதரவளிக்கக் கூடுமென்ற அச்சம் காரணமாக கட்சியை விட்டு நீக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை