வரலாற்றில் கூடுதல் வேட்பாளர் களமிறங்கும் ஜனாதிபதி தேர்தல்

*ஒரு பெண், 02 பிக்குகள் உட்பட  30 பேர் நேற்றுவரை கட்டுப்பணம்

*திங்களன்று வேட்புமனு ஏற்பு

*தேர்தல் கண்காணிப்புக்கு இந்தியா, பாக். உட்பட 05 நாடுகளுக்கு அழைப்பு

2,000 பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். நேற்றுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை(7) காலை ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொள்வதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தேர்தல் செயலக வளாக பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் அனுமதி பெற்ற இருவருமாக மூவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்களென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதனால் இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வழமைக்கும் மாறான  வேலைப்பளுவுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று மாலைவரை ஒரு பெண், இரண்டு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 30பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு சுமார் 05ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கலாமென்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று காலை விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவன் குணசேகரவும் கலந்துகொண்டார்.

 

வேறு வேட்பாளருக்கு வாக்கு கேட்க முடியாது

வேட்புமனுவைத் தொடர்ந்து வாக்குகளை சேகரிக்கும் அதிகாரமும் உரிமையும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் தனக்குரிய வாக்கை இன்னுமொரு வேட்பாளருக்கு வழங்குமாறு பொதுமக்களை கோருவதற்கு எந்தவொரு வேட்பாளரையும் தேர்தல் ஆணைக்குழு அனுமதிக்காது என்றும் அவ்வாறான பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

"வேட்புமனு தாக்கல் தினத்தன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அங்கு வருகை தருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாளை காலை முதல் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட சுமார் 02 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். புலனாய்வு அதிகாரிகளும் இங்கு கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னரும் பின்னரும் வீதிகளில் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்றும் தலைவர் தெரிவித்தார்.

"நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யாதவிடத்து ஆட்சியிலுள்ள ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எவரும் போட்டியிடாத முதல் ஜனாதிபதி தேர்தலாக இது அமையும்," என்றும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்புமனு தாக்கல் செய்ய வருவாராயின் பாதுகாப்பு மேலும் இரட்டிப்பாக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தோனேசியா, இந்தியா,அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியமும் பொதுநலவாய கண்காணிப்பு அமைப்பும் சுயவிருப்பின்பேரில் இலங்கைக்கு வருகைதர இருப்பதாகவும் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது-

கூடுதலானோர் கட்டுப்பணம்

முதற்தடவையாக அதிகமானோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதனால் தேர்தல் ஆணைக்குழுவில் மட்டுமன்றி தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்குமான வேலைப்பளு அதிகரிக்கவுள்ளது. அனைவரும் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என நம்புகின்றோம். இதனால் இம்முறை அதிக எண்ணிக்கையிலான வாக்கு எண்ணும் நிலையங்கள் தேவைப்படும். செலவும் அதிகரிக்கும். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 4500 மில்லியன்கள் வரை அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் செலவீனம் சுமார் 05 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்ககூடுமென்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

முறைப்பாடுகள்-

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள எமது முறைப்பாட்டு நிலையத்துக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. அவை தொடர்பில் நாம் அதிகாரிகளை உரிய இடத்துக்கு அனுப்பி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். ஊடகங்கள் மற்றும் மாவட்டரீதியாகவும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்கின்றோம்.

கடந்த மூன்று தினங்களாக தனியார் தொலைக்காட்சிகளில் ஔிபரப்பான செய்திகளில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் சுமார் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேநேரம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அண்மையில் வழங்கப்படவிருந்த 7500 நியமனங்களை நாம் நிறுத்தியுள்ளோம். சட்டவிரோத நியமனங்கள், இடமாற்றங்கள் தொடர்பிலும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகளிலும் பார்க்க நியமனங்கள், அனுமதிகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பிலேயே அதிகமான கோரிக்கைகள் எமக்கு கிடைத்தவண்ணமுள்ளன. முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புவோர் 011- 2868212, 011-2868217, 011-2868560 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது 011- 2868529, 011- 2868526 ஆகிய தொலைநகல் இலக்கங்களிலோ அல்லது 0719160000 என்ற வைபர் அல்லது வட்ஸ்அப் இலக்கத்துக்கூடாகவோ தமது முறைப்பாட்டை முன்வைக்கலாம்.

[email protected] எனும் மின்னஞ்சல், Election Commission of Sri Lanka அல்லது Tell Commission Election Commission of Sri Lanka எனும் பேஸ்புக்கிற்கூடாகவும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களில் வரக்கூடிய வெறுப்புணர்வை தூண்டக்கூடிய செய்திகள் மற்றும் பேச்சுக்களுக்கு எதிராகவும் நடவடிக்ைக எடுப்போம்.

போஸ்டர் மற்றும் கட்அவுட்கள்

போஸ்டர்களையும் கட்அவுட்களையும் சுயமாக நீக்கிக்கொள்ளுமாறு நாம் கட்சிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். பொலிஸாரும் அவற்றை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் சட்டவிதிகளை மீறி போஸ்டர்களையும் கட்அவுட்களையும் காட்சிப்படுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனுவைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம்.

வேட்புமனுவைத் தொடர்ந்து வேட்பாளரின் முகம் காட்சிப்படுத்தப்படாத கூட்டம் பற்றிய போஸ்ட்டர்களை மட்டும் கூட்டம் நடத்தப்படும் இடத்தில் சுமார் ஒருவார காலத்துக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளோம்.

கட்சிகளை பணத்துக்கு வாங்குதல்

தேர்தல் ஆணைக்குழு எந்தவொரு கட்சியையும் பிரதான கட்சியாக கருதுவதில்லை. ஆணைக்குழுவுக்கு அனைத்து கட்சிகளும் சமனானவை. பல கட்சிகள் கூட்டிணைந்து கூட்டமைப்பாக போட்டியிடுவது வழக்கமாகவுள்ளதொரு செயன்முறை. இங்கு கட்சிகள் பணம் கொடுத்து வாங்கப்படுவது தொடர்பில் எமக்கு தெரியாது. சாட்சியங்களுடன் எழுத்துமூலமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் நாம் அது குறித்து ஆராய்வோம். தேர்தல் காலத்தில் பணம் கொடுத்து கட்சிகளை வாங்கும் செயன்முறையை ஆணைக்குழு வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் கேள்வியொன்றுக்கு பதிலளித்தார்.

பிரசார நடவடிக்கைகள்

வேட்பாளர்கள் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களை கோரமுடியுமே தவிர தனக்குரிய வாக்கை பிறருக்கு வழங்குமாறு கோருவது சட்டப்படி தவறு. அவ்வாறு கோருபவர்களை தேர்தல் ஆணைக்குழு வேட்பாளர்களாக கருத மாட்டாது.

சொத்துவிபரங்கள்

வேட்புமனுவுடனேயே சொத்து விவரங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக்ெகாண்டுள்ளோம். மேலும் தமது வலைத்தளங்களில் அதனை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக்ெகாண்டுள்ளோம்.

கண்காணிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பு அமைப்புக்கள் தமது சுய விருப்பின்பேரில் இலங்கை வரவுள்ளன. உத்தியோகப்பூர்வ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தோனேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

மேலும் கற்கை நடவடிக்கைகளுக்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்,தென்கொரியா,அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், இந்தோனேசியா, பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உள்ளூர் போக்குவரத்து மற்றும் தங்குமிடவசதிகளுக்கான ஏற்பாடுகளை மட்டுமே தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும்.

உள்ளூரைச் சேர்ந்த பெப்ரல் மற்றும் சி.எம்.இ.வி ஆகிய அமைப்புக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு கண்காணிப்பு அமைப்பும் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்குமாயின் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

பாதுகாப்பு

இதேவேளை இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில், அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நாளை மறுதினம் சரண மாவத்தை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வர அனுமதிக்கப்படும். அனைவரும் சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர். இதற்காக 10 சோதனைச்சாவடிகள் தயார்படுத்தப்படும். வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை பயன்படுத்துங்கள்.

ராஜகிரிய பகுதியில் போக்குவரத்துக்காக 500 பொலிஸாரும் ஏனைய சோதனை நடவடிக்கைகளுக்காக 1200 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பர்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை