அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் தரப்போவதில்லை

வன்னி மாவட்ட எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் எமக்குத் தரப்போவதில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்பந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை. நீதிமன்றத்தின் கட்டளையை நடை முறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நீதிமன்றத்தின் கட்டளை வருவதற்கு முன்பாக வடபிராந்திய பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக கதைத்தேன்.

குறித்த தேரரின் சடலத்தை ஞானசார தேரர் தன்னிச்சையாக ஒரு இடத்தில் தகனம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.ஆனால் நீதிமன்ற கட்டளை வருவதற்கு முன்னர் இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அதன்போது பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தேன்.

எனினும் பொலிஸார் பௌத்த மத குருக்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டுள்ளனர்.

இவ்விரண்டு விடயங்களிலும் பௌத்த மதகுருக்களை அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டுப்படுத்த நீதிமன்றங்களினால் முடியாது என்கின்ற செய்தி வெளிப்படையாக புலப்படுகின்றது.

பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக பொலிஸ் திணைக்களமோ அல்லது எந்தத் திணைக்களமோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற சூழ்நிலை    வெளிப்படையாக தெரிகின்றது.

வடக்கு- , கிழக்கில் தமிழ் மக்களாக இருக்கலாம் அல்லது தமிழ் பேசுகின்ற மக்களாக இருக்கலாம் சிங்கள பேரினவாதிகள் அவர்களுடைய கொள்கைக்கு இணங்கிப்போனால் மாத்திரமே இலங்கையில் வாழமுடியும். என்ற விடயத்தை அவர்கள் இந்த செயற்பாட்டின் மூலம் வெளிப்படையாக சொல்கின்றார்கள்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த சிந்தனையை மீறி தமிழ் மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு தயார் இல்லை.

நீராவியடி பிள்ளையார் ஆலயம் தொடர்பான நீதிமன்றத்தின் கட்டளையை பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக நாட்டின் ஜனாதிபதி இருக்கின்றார்.

சட்டத்தரணிகளினுடைய பகிஷ்கரிப்பு தொடர்பாகத்தான் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

நாம் பொதுவான அரசியல் இல்லாத தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து ஓர் செய்தியை வழங்க வேண்டும்.

இருக்கின்ற ஜனாதிபதி அரசியல் தீர்வு தருவார். புதிதாக வரும் ஜனாதிபதியினால் தான் முடியும் எனக் கூற முடியாது.

ஜனாதிபதியாக வருகின்றவருக்கு வாக்களிக்க முடியும். ஆனால் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்காக வாக்களிப்பது என்பதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

--ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை.யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்பந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் குறூப் நிருபர்)

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை