ல. முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு பூரண ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு முழு அளவில் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுக் காலை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது படையினர் நிலைகொண்டுள்ள மற்றும் வனபரிபாலன திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளத்தில் உக்கிரமடைந்துள்ள அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உரியமுறையில் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் குடியிருப்பு தொடர்பிலான பிரச்சினைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. கல்முனை விவகாரம் குறித்தும், பொதுவாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கட்சியின் தலைவர் மற்றும் பிரதிநிதிகளால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இவற்றுக்கு பதிலளித்த சஜித் பிரேமதாஸ, அரசியல் மற்றும் பூகோள ரீதியில் நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை உன்னத நிலைக்கு கொண்டுவருதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். நாட்டுப் பிரஜைகளான பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் எனது நம்பகத்தன்மை பற்றி கிஞ்சித்தும் சந்தேகிக்கவோ அதுபற்றி இருமுறை சிந்திக்கவோ தேவையில்லை.

உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என்றார்.

Thu, 10/03/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக