சு.க பிரச்சினையை தீர்க்க ஐ.தே.வுடன் சேர்வது தீர்வல்ல

தந்தை உருவாக்கிய கட்சியென்றுகூடப் பாராமல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க லங்கா சுதந்திரக் கட்சியை சீரழிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விசனம் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தனி அரசாங்கம் அமைப்போமென்றும் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை (22) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"சுதந்திரக் கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை கட்சிக்குள்ளிருந்து தீர்க்க வேண்டுமே தவிர, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது இதற்குத் தீர்வாகாது என்பதை சந்திரிக்கா அம்மையார் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மீது நாம் மதிப்பு வைத்துள்ள போதும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியன்று அவர் எடுத்த தீர்மானம் தவறானது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்," என்றும் அவர் கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது-

சுதந்திரக் கட்சிக்குள் பல பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கான தீர்வு ஐ.தே.கவுடன் இணைவது அல்ல. எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க கட்சிக்காக செய்த தியாகங்களை அவருடைய மகள் சீரழிக்கின்றார். சுதந்திரக் கட்சி கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட்டதால்தான் இன்று பல பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்நிலைமை தொடருவதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக சுதந்திரக்கட்சி முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தற்போதுள்ள பிரதமரை நீக்கி பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இணைந்த தனி அரசாங்கம் அமைப்பதற்கான ஒத்துழைப்பை பொது மக்களிடம் கோருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை