எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை தேசிய தேர்தலுடன் ஒப்பிட முடியாது

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கனவு காண்பதாககிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப்சம்சுதீன் தெரிவித்தார்.

கல்முனையிலுள்ள அவரது மக்கள் பணிமனையில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அவர்:

கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் தக்க வைப்பது போலவே எல்பிட்டி பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தக்க வைத்துள்ளது.

எமது சமூகத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் முன்வைத்த பிரச்சினைகளை வெற்றியின் பின்னர் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் தீர்க்க முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளிவே வாழ்கின்ற முஸ்லிம்கள் அச்ச உணர்வுடனே வாழ்கின்றனர். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், நாளாந்தம் அச்சநிலையிலே இருக்க நேரிடும். முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புத்தி சாதுர்யத்துடனும் சாணக்கியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். எமது பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதாக சிலர் நமது மக்களை வேறு திசைக்கு திருப்புகின்றனர்.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு தமது பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய தருணமாக இக்கால கட்டம் உள்ளது. முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகத்துடன் இன சௌஜன்யத்துடனும், சம உரிமையுடனும் நிம்மதியாக வாழ்வதற்கு எமது அரசியல் பலத்தை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒற்றுமையாக நாம் செயற்படும் போதுதான் எமது அரசியல் பலத்தைப் பாதுகாக்க முடியும். எங்கு எமது வாக்குப் பலம் அதிகமாகவுள்ளதோ அங்குதான் எமக்குரிய மரியாதை கிடைக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களம் இறக்கப்படுவதற்கு ஆரம்ப காலம் தொட்டு காரண கர்த்தாவாக செயற்பட்டவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கான தார்மீக பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்குள்ளது. எமது அரசியல் பலத்தை வைத்தே சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. தருணம் வரும்போது அனைத்துப் பிரச்சினைகளும் மிக கச்சிதமாக தீர்த்து வைக்கப்படும். இதற்கான முயற்சிகளிலே நாம் ஈடுபடுகின்றோம் என்றார்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

 

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை