ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டன் பிரதமர் கையொப்பமின்றி கடிதம்

பிரெக்சிட்டை தாமதிக்கக் கோரி

பிரெக்சிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கையொப்பம் இடாத கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதனுடன் இணைக்கப்பட்ட ஜோன்சன் கையொப்பமிட்ட கடிதத்தில் இதனைத் தாமதப்படுத்துவது தவறானது என்று நம்புவதாக வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒக்டோபர் 31 ஆம் திகதி காலக்கெடுவை நீடிப்பதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது பிரதமர் ஜோன்சனுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதன்படி பிரதமர் காலக் கெடுவை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்க கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு சட்டரீதியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

காலக்கெடுவை நீடிப்பதற்கான கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்ததாக ஐரோப்பிய ஒன்றிய கெளன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எப்படி பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தாம் ஆலோசனை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமப்படுத்தும் பாராளுமன்றத்தின் அறிவுறுத்தலை பிரதமர் தவிர்க்க முயன்றால் அவர் வழக்கிற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை நீடிப்பதற்கு கோருவதை விட தான், மலையில் குதித்து செத்து விடுவேன் என்று ஜோன்சன் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த வாக்கெடுப்பில் ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக 322க்கு 306 பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

இதனை அடுத்தே பிரெக்சிட்டை தாமதப் படுத்தக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கையொப்பம் இடாத கடிதத்தை பிரிட்டன் பிரதமர் அனுப்பியுள்ளார். ஆனால் அதனுடன் சேர்த்து அனுப்பப்பட்ட இரண்டாவது கடிதத்தில், தாமதப்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தனிப்பட்ட முறையில் நம்புவதாக பிரதமர் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களோடு எட்டப்பட்ட திருத்தப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றும், ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் அதை செய்து முடிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தனது இரண்டாவது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை