வடக்கு மக்களை அழித்தொழித்த கோட்டாபய எந்த முகத்துடன் வாக்கு கேட்கிறார் ?

இந்த நாட்டு மக்களில் 20 சதவீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்துவிட்டதாகவும் வாக்குகளை எண்ணும் போது இதில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எதிர்த் தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் ஆட்சியில் இருந்த போது வடக்கு மக்களை அழித்தொழித்துவிட்டு எந்த முகத்துடன் வாக்குகேட்டு வருகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் வவுனியாவில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் தனதுரையில், இன்றைய தேர்தல் எமக்கு மிகவும் முக்கியமானது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை வெற்றிக்கொண்டது.ஆனால் எமது மக்களை அழித்தது. மக்கள் எதிர் பார்க்கும் எவ்வித அபிவிருத்திகளும் வந்து சேரவில்லை.இந்த யுத்தத்தினால் இன்று கணவன்களை இழந்த 90,000 ஆயிரம் பெண்களும் அவயவங்களை இழந்த மற்றும் அங்கவீனமுற்ற 50 ஆயிரம் பேரும் இருக்கின்றனர். பெற்றோர்களை இழந்த 12 ஆயிரம் சிறார்கள் இங்கு இருக்கின்றனர். இவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமானது.

பொருளாதார ரீதியில் எவ்வித முன்னேற்றமும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.இந்த நிலையில் வடக்குக்கு வந்து சிலரை பிடித்துக் கொண்டு வாக்கு கேட்கின்றனர். இப்படிப்பட்டவர்கனை நம்பியா எமது மக்கள் வாக்களிக்கப் போகின்றனர்.

இன்று வடக்கு, கிழக்கு, மலையகம், தலை நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய சிங்கள மக்களும் சஜித் பிரேமதாசவின் வெற்றியினை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயல்கின்றனர். எந்த அரசியல் தலைவர்கள் எதை சொன்னாலும், யுத்தம் எம்மை ஆக்கிரமிப்பு செய்து அதன் மூலம் இழந்தவைகளை பெற்றுக்கொள்ள எமது மக்களுக்கு தடையினை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளை இனம் கண்டுள்ளோம். அவர்களை புறந்தள்ளி, அச்சமற் சூழலில் எமது மக்கள் வாழ்வதற்கும் அதனை ஏற்படுத்துவதற்கும் போதுமான தலைவராக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை பார்க்க முடியும் என்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

 

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை