மன்னார் பிறீமியர் லீக்' உதைபந்தாட்ட போட்டிக்கான அனைத்து அணிகளும் கொள்வனவு

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் ' என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ள 10 அணிகளையும் உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளதாக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உதைபந்தாட்டத்தில் தலை சிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் 'மன்னார் பிறீமியர் லீக் என்னும் மாபெரும் உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்குசெய்துள்ளது.

போட்டியில் பங்குபற்றவுள்ள 10 அணிகளையும் உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

மன்னார் நெடுங்கண்டலைச் சேர்ந்த வேந்தக்கோன்,மன்னாரை சேர்ந்த மதன் லக்ஸ்ரன்,சாவற்கட்டை சேர்ந்த ஜெயானந்தசீலன்,பள்ளிமுனையை சேர்ந்த செல்வக்குமரன் டிலான்,மடு பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த பிறிற்றோ லெம்பேட் ,பனங்கட்டுக்கொட்டை சேர்ந்த சுமித், மன்னாரைச் சேர்ந்த சுரேன், தோட்டவெளியை சேர்ந்த கிங்ஸ்லி கறுக்காக்குளத்தை சேர்ந்த சட்டத்தரணி றொமோல்சன், தலைமன்னாரை சேர்ந்த சட்டத்தரணி டினேசன் ஆகியோர் அணிகளை கொள்வனவு செய்துள்ளனர்.

அணிகளை கொள்வனவு செய்தவர்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடலும், அணிகளின் பெயர், சீருடை நிறம், அணிகளின் கொடி போன்ற விடயங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 27 ஆம் திகதி (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சகல உரிமையாளர்களையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பதுடன் உரிய ஆயத்தங்களுடனும் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ் தெரிவித்தார்.

 ( மன்னார் குறூப் நிருபர்)

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை