உணவு உற்பத்தியை அதிகரிக்க இலவசமாக பசளை வழங்குவேன்

 ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ

நம் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் பிரசாரக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தலைமையில் அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நேற்று முன்தினம் (29) மாலை நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறியானி விஜய விக்ரம, விமல் வீரவங்ச மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நம் நாட்டின் நெல் உற்பத்தியின் முன்னணி வகிக்கும் மாவட்டங்களில் அம்பாறையும் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, நம் நாட்டு விவசாயிகளின் நலனுக்காக பல விவசாய தொழிநுட்ப திட்டங்களை உட்புகுத்தி உணவு உற்பத்தியை அதிகரிப்பதும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எமது நாட்டை பொறுத்த வரை தற்போது நம் நாட்டில் அரசு உரிய முறையில் பாதுகாப்பை மக்களுக்கு வழங்கவில்லை. முறையான பாதுகாப்பை மூவின மக்களுக்கும் வழங்குவதும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒன்றாகும்.

பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது, அதுமட்டுமன்றி இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெறும் தொழிநுட்பக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும் யுத்தம் துடைத்தெறிந்ததைப்போன்று மக்களின் நலனுக்காக பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் எம்மால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

(அம்பாறை மத்திய குறூப் நிருபர்)

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை