மலையக மக்கள் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி செயலணி

த.மு.கூட்டணி − சஜித் சந்திப்பில் தீர்மானம்

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவதுடன் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தயார் என ஐ.தே.மு. ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் உறுதியளித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு உறுதியளித்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அண்மைக்கால செயற்பாடுகளினால் மலையகத்தில் புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உதயம், மலையகத்திற்கான அதிகார சபை உருவாக்கம், காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி அபிவிருத்திகள் உட்பட பல அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. இந் நிலையில் இந்த சந்திப்பின் ஊடாக மலையக மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் மூலம் பல அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கானும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை தான் உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, நான் கொடுக்கின்ற வாக்குறுதிகளை என் தலையை அடமானம் வைத்தாவது செய்து முடிப்பேன். இதுவே எனது கொள்கை என சஜித் குறிப்பிட்டார்.

Fri, 10/04/2019 - 08:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை