அரவம் தீண்டி சிறுவன் மரணம்

வவுனியாவில் சம்பவம்

வவுனியா பாவற்குளம் பகுதியில் பாம்பு தீண்டி 5 வயது சிறுவன் இறந்தமைக்கு காரணம் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என கிராமவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாவற்குளம் படிவம் ஒன்று என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் எஸ்.சுஜன் அரவம் தீண்டி அண்மையில் இறந்துள்ளான். இத்துயரச்சம்பவம் இடம்பெற்றமைக்கு காரணம் அக்குடும்பத்தினருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என உறவினர்களும் கிராம மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் கோழிக்கூடு அளவில் இருக்கும் தகர குடிசையில் வசித்துவரும் கூலித்தொழிலாளி சுரேனிற்கு மூன்று பிள்ளைகள் அதில் மூத்த பிள்ளையாகிய சுஜனே நித்திரையில் இருக்கும்போது அரவம் தீண்டி இறந்துள்ளார்.

பாவற்குளம் சனசமூக நிலையத்தின் தலைவர் அ.அலக்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருடங்களாக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எமது கிராமத்தின் நிலை தொடர்பாக தெளிவுபடித்தியுள்ளோம். இருந்தபோதும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் அரசாங்கம் அசமந்தமாக செயற்பட்டமையே இந்தநிலைமைக்கு காரணம். இதுபொன்ற 10 உப குடும்பங்கள் எமது கிராமத்தில் கொட்டகைகளில் வசித்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 

கோவில்குளம் குறூப் நிருபர்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை