Header Ads

ஈராக் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்பு 99ஆக உயர்வு

வன்முறையை நிறுத்த  ஐ.நா அழுத்தம்

ஈராக்கில் நீடிக்கும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழப்பு 100ஐ எட்டி இருக்கும் நிலையில் இந்த அர்த்தமற்ற உயிரிழப்புகளை முடிவுக்கு கொண்டுவரும்படி ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் வேலையின்மை, மோசமான பொதுச் சேவைகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

“ஐந்து நாட்களில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் நிறுத்தப்படல் வேண்டும்” என்று ஈராக்கிற்கான ஐ.நா உதவி தூதரகத்தின் தலைவர் ஜீனின் ஹனிஸ் பிளஸ்சார்ட் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு பக்தாதில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாரிய பேரணியை பாதுகாப்பு படையினர் கலைக்க முயன்றனர்.

ஈராக் தலைநகரில் ஏற்பட்ட புதிய மோதல்களில் ஐவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகரில் ஆரம்பித்து நாட்டின் தென் பகுதிக்கு பரவிய இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது 99 பேர் கொல்லப்பட்டு சுமார் 4,000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு இஸ்லாமிய அரசுக் குழு தோற்கடிக்கப்பட்ட பின் ஈராக்கில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட பதற்றமாக இது மாறியுள்ளது.

ஓர் ஆண்டுக்கு முன் பதவிக்கு வந்த ஈராக் பிரதமர் அதல் அப்தல் மஹதி அரசுக்கு பாரிய சவாலாக இந்த ஆர்ப்பாட்டம் மாறியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் மற்றும் இணையதளங்களை முழுமையாக முடக்கி ஆரப்பாட்டங்களை கட்டுப்படுத்த அரசு முயன்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை பகல் நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் சிறு குழுக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்தன. ஆர்ப்பாட்டங்களின் முக்கிய தளமாக தலைநகரில் இருக்கும் தஹ்ரிர் சதுக்கம் உள்ளது. எனினும் அது சனிக்கிழமை மூடப்பட்டிருந்தது.

சனிக்கிழமை மதியம் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அவசரக் கூட்டமும் நடத்த முடியாமல் போனது. சவூதி அரேபியாவுக்கு சொந்தமான அல் அரேபியா செய்தித் தொலைக்காட்சி உட்பட பல தொலைக்காட்சி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நஸ்ரியாவில் ஆறு அரசியல் கட்சிகளின் தலைமையகங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

தெற்கு நகரான திவானியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு தெளிவான தலைமையும் இன்றியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் தீவிரப் போக்கை அதிகரித்து வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க ஈராக்கியப் பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை குறித்து அவதானம் செலுத்துவதாக பிரதமர் மஹ்தி கடந்த வெள்ளிக்கிழமை வாக்குறுதி அளித்ததோடு ஈராக்கிய பிரச்சினைகளுக்கு “மந்திர தீர்வு” இல்லை என்று எச்சரித்தார்.

இதன்போது ஈராக் பாதுகாப்பு படையினருக்கு தமது முழு ஆதரவை வெளியிட்ட பிரதமர், ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும் சர்வதேச தரத்திலேயே படையினர் செய்படுகின்றனர் என்றும் வலியுறுத்தினார்.

ஈராக்கின் மூத்த ஷியா மதகுருவான அயதுல்லா அலி அல் சிஸ்தானி, சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே, பிரதமர் மஹ்தி பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் ஈராக்கின் செல்வாக்குமிக்க ஷியா பிரிவு மத குருவான மொக்ததார் சத்ர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வரை பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டாம் என்று தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சத்ர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்கா, ஈராக் அரசு கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

நாட்டில் நிலவும் ஊழல், வேலையின்மை மற்றும் மோசமான பொதுச் சேவைகளால் இளைஞர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. எந்த தலைமைத்துவமும் இன்றி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சம காலத்தில் நாட்டின் தெற்கில் ஷியா முஸ்லிம்களின் பகுதிகளில் பரவியுள்ளது.

ஈராக் உலகின் நான்காவது பெரிய எண்ணெய் இருப்புக் கொண்ட நாடாக இருந்தபோதும், மக்கள் தொகையில் 22.5 வீதமான 40 மில்லியன் பேர் நாளொன்றுக்கு 1.90 டொலர்களுக்கு குறைவான வருவாயை ஈட்டுவதாக 2014 உலக வங்கி அறிக்கை ஒன்று காட்டுகிறது.

ஆறில் ஒரு வீட்டுரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு இன்மைக்கு முகம்கொடுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஈராக்கில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 7.9 வீதமாக இருந்தபோதும், இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.

பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடும் மக்களில் 17 வீதமானவர்கள் தகுதி குறைந்த வேலையில் ஈடுபடுகின்றனர்.

2014 இல் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கின் பெரும்பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ் குழுவுக்கு எதிரான கொடிய போருக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வருவதற்கும் ஈராக் போராடி வருகிறது.

போதுமான சேவைகள் வழங்கப்படாத நிலையில் மோதல் இடம்பெற்ற பகுதிகளின் வாழ்க்கைத் தரம் மிக மோசடைந்துள்ளது. “மக்கள் பட்டினியில் உள்ளனர் அதனால்தான் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்” என்று 51 வயதான ஒருவர் தெரிவித்தார். “இங்கு எம்மிடம் அதிக எண்ணெய் இருப்பு இருக்கின்றபோதும் நாட்டின் எந்த ஒரு செல்வத்தையும் நாம் காணவில்லை. அவை எங்கே செல்கின்றன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.