77 வீதம் வாக்களிப்பு எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது பொதுஜன பெரமுன

எல்பிட்டிய பிரதேச சபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்று 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, 28 உறுப்பினர்களை கொண்ட சபையின் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பொதுஜன பெரமுனவே கைப்பற்றியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இரவு அறிவித்தது.ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்த போதிலும் அக்கட்சிகளால் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்றுக் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது. பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 77 சதவீதமானோர் வாக்களித்தனர்.

ஐந்து கட்சிகளின் சார்பில் 155 பேர் தேர்தலில் களமிறங்கியிருந்த நிலையில் இவர்களிலிருந்து தொகுதி அடிப்படையில் 17 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 11 பேருமாக மொத்தம் 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலுக்காக 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. 750 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர். பாரிய தேர்தல் வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகியிருக்கவில்லை.

வாக்களிப்பு முடிவடைந்த கையோடு வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகி, இரவு 10 மணியின் பின்னர் இறுதி முடிவுகள் வெளியாகின.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ள நிலையில் விகிதாசார முறையின் கீழ் ஐ.தே.க 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் ஜே.வி.பி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தேர்தல் பணிகளுக்காக, எல்பிட்டிய தொழில் பயிற்சி நிலையம் தற்காலிக தேர்தல் அலுவலகமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று எல்பிட்டிய பிரதேசத்துக்கு நேரில் சென்று வாக்களிப்பு இடம்பெறுவதை நேரில் கண்காணித்தார்.

2011 இல் நடைபெற்ற எல்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 58.53 சதவீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 30.59 வாக்குகளையும், ஜே.வி.பி, 7.45 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபையில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாகவும் மக்கள் அதிக அக்கறையுடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது.

 

 

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை