ஜப்பானை புரட்டிப்போட்ட புயல்: உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு

ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 110,000க்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல தசாப்தங்களில் இடம்பெற்ற மிகச் சக்திவாய்ந்த இந்த புயலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 20 பேர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் டோக்கியோவின் தென்மேற்குப்பகுதியில் ஹகிபிஸ் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை கொட்டியது. அதனால் வீடுகளின் மேற்கூரைகள், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அதிகமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.

இந்தப் புயல் கடந்த ஞாயிறு மாலை வலுவிழந்து தரையை கடந்தபோதும் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மன்சரிவு மற்றும் வெள்ளத்தினால் சிக்கிருக்கும் பகுதிகளை அடைவதற்கு ஆயிரக்கணக்கான பொலிஸார், தீயணைப்புப் படையினர், கரையோர காவல் படையினர் மற்றும் இராணுவத்தினர் முயன்று வருகின்றனர்.

இடுப்பு வரை உயர்ந்திருக்கும் நீருக்கு இடையே நகானோ பகுதியில் மீட்பாளர்கள் உயிர் தப்பியவர்களை தேடி வருகின்றனர். நகானோவில் உள்ள ரயில் நிலையத்தில் 10 அதிவேக ரயில்களும் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

வெள்ளத்தால் தனித்துவிடப்பட்ட வீடுகளே மீட்பு நடவடிக்கைகளில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படுவதாக பிரதமர் அலுகவலகம் குறிப்பிட்டுள்ளது.

கரைபுரண்டோடும் ஆறுகளால் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், தண்ணீரை அகற்ற மேலும் வசதிகளைச் செய்து தருமாறு ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 92,000 வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

புயல் உச்சத்தை எட்டியபோது ஏழு மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் 50,000 பேர் தற்காலிக முகாம்களில் உள்ளனர்.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை