45ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

விளையாட்டு துறை அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விளையாட்டு விழா இன்று (24) 45ஆவது தடவையாகவும் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வீர, வீராங்கனைகள் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கை சென்றடைந்துள்ளார்கள்.

கொழும்பை மையமாகக் கொண்டு இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஆனால் கிராமங்களில் வசிக்கும் வீரர்களின் திறமையை வளர்க்க இவ்வாறான போட்டிகளை கொழும்புக்கு வெளியே நடத்துவதே விளையாட்டுத் துறை அமைச்சின் நோக்கமென செயலாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

இம்முறை போட்டிகளில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வீர, வீராங்கனைகள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பங்குபெறவுள்ளார்கள். போட்டிகள் பல கட்டங்களாக நடைபெறவுள்ளன. சில குழு போட்டிகள் பல நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவிருந்தார். ஆனால் அவர் திடீரென ஜப்பான் சென்றுள்ளார். இதேவேளை நிறைவு நாள் விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

தேசிய விளையாட்டு விழாவில் சாதனைகளை நிலைநாட்டும் வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசும் வழங்கப்படுமென விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகல தெரிவித்தார். அதன்படி இலங்கை சாதனைக்கு 100,000 ரூபாவும் போட்டி சாதனைக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. விளையாட்டு விழாவில் திறமையான வீர, வீராங்கணைக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பரிசளிக்கப்படவுள்ளன.

அதற்கான அனுசரணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கவுள்ளது.

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை